That if thou shalt confess with thy mouth the Lord Jesus, and shalt believe in thine heart that God hath raised him from the dead, thou shalt be saved.
இதோ, பெலிஸ்தர் கேகிலாவின்மேல் யுத்தம்பண்ணி, களஞ்சியங்களைக் கொள்ளையிடுகிறார்கள் என்று தாவீதுக்கு அறிவிக்கப்பட்டது.
அப்பொழுது தாவீது: நான் போய், அந்தப் பெலிஸ்தரை முறிய அடிக்கலாமா என்று கர்த்தரிடத்தில் விசாரித்ததற்கு, கர்த்தர்: நீ போ; பெலிஸ்தரை முறிய அடித்து, கேகிலாவை இரட்சிப்பாயாக என்று தாவீதுக்குச் சொன்னார்.
ஆனாலும் தாவீதின் மனுஷர் அவனை நோக்கி: இதோ, நாங்கள் இங்கே யூதாவிலே இருக்கும்போதே பயப்படுகிறோம்; நாங்கள் பெலிஸ்தருடைய சேனைகளை எதிர்க்கிறதற்கு கேகிலாவுக்குப் போனால், எவ்வளவு அதிகம் என்றார்கள்.
அப்பொழுது தாவீது திரும்பவும் கர்த்தரிடத்தில் விசாரித்தபோது, கர்த்தர் அவனுக்கு உத்தரமாக: நீ எழும்பி, கேகிலாவுக்குப் போ; நான் பெலிஸ்தரை உன் கையில் ஒப்புக்கொடுப்பேன் என்றார்.
அப்படியே தாவீது தன் மனுஷரைக் கூட்டிக்கொண்டு, கேகிலாவுக்குப் போய், பெலிஸ்தரோடு யுத்தம்பண்ணி, அவர்களில் அநேகம்பேரை வெட்டி, அவர்கள் ஆடுமாடுகளை ஓட்டிக்கொண்டு போனான்; இவ்விதமாய் கேகிலாவின் குடிகளை இரட்சித்தான்.
அகிமெலேக்கின் குமாரனாகிய அபியத்தார் கேகிலாவில் இருக்கிற தாவீதினிடத்தில் தப்பியோடுகிறபோது, அவனிடத்தில் ஒரு ஏபோத்து இருந்தது.
தாவீது கேகிலாவுக்கு வந்தான் என்று சவுலுக்கு அறிவிக்கப்பட்டபோது, தேவன் அவனை என் கையில் ஒப்புக்கொடுத்தார்; அவன் கதவுகளும் தாழ்ப்பாள்களுமுள்ள பட்டணத்திற்குள் பிரவேசித்ததினால், அடைபட்டிருக்கிறான் என்று சவுல் சொல்லி,
தாவீதையும் அவன் மனுஷரையும் முற்றிக்கை போடும்படிக்கு, கேகிலாவுக்குப் போக, எல்லா ஜனத்தையும் யுத்தத்திற்கு அழைப்பித்தான்.
தனக்குப் பொல்லாப்புச் செய்யச் சவுல் எத்தனம்பண்ணுகிறான் என்று தாவீது அறிந்துகொண்டபோது, ஆசாரியனாகிய அபியத்தாரை நோக்கி: ஏபோத்தை இங்கே கொண்டுவா என்றான்.
அப்பொழுது தாவீது: இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தாவே, சவுல் கேகிலாவுக்கு வந்து, என்னிமித்தம் பட்டணத்தை அழிக்க வகைதேடுகிறான் என்று உமது அடியானாகிய நான் நிச்சயமாய்க் கேள்விப்பட்டேன்.
கேகிலா பட்டணத்தார் என்னை அவன் கையில் ஒப்புக்கொடுப்பார்களோ, உம்முடைய அடியான் கேள்விப்பட்டபடி சவுல் வருவானோ, இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தாவே, இதை உம்முடைய அடியானுக்குத் தெரிவிக்கவேண்டும் என்றான். அதற்குக் கர்த்தர்: அவன் வருவான் என்றார்.
கேகிலா பட்டணத்தார் என்னையும் என் மனுஷரையும் சவுலின் கையில் ஒப்புக்கொடுப்பார்களோ என்று தாவீது கேட்டதற்கு, கர்த்தர்: ஒப்புக்கொடுப்பார்கள் என்றார்.
ஆகையால் தாவீதும் ஏறக்குறைய அறுநூறுபேராகிய அவன் மனுஷரும் எழும்பி, கேகிலாவை விட்டுப் புறப்பட்டு, போகக்கூடிய இடத்திற்குப் போனார்கள்; தாவீது கேகிலாவிலிருந்து தப்பிப்போனான் என்று சவுலுக்கு அறிவிக்கப்பட்டபோது, தான் புறப்படுகிறதை நிறுத்திவிட்டான்.
தாவீது வனாந்தரத்திலுள்ள அரணான ஸ்தலங்களிலே தங்கி, சீப் என்னும் வனாந்தரத்திலிருக்கிற ஒரு மலையிலே தரித்திருந்தான்; சவுல் அனுதினமும் அவனைத் தேடியும், தேவன் அவனை அவன் கையில் ஒப்புக்கொடுக்கவில்லை.
தன் பிராணனை வாங்கத் தேடும்படிக்கு, சவுல் புறப்பட்டான் என்று தாவீது அறிந்தபடியினாலே, தாவீது சீப் வனாந்தரத்திலுள்ள ஒரு காட்டிலே இருந்தான்.
அப்பொழுது சவுலின் குமாரனாகிய யோனத்தான் எழுந்து, காட்டிலிருக்கிற தாவீதினிடத்தில் போய், தேவனுக்குள் அவன் கையைத் திடப்படுத்தி:
நீர் பயப்படவேண்டாம்; என் தகப்பனாகிய சவுலின் கை உம்மைக் கண்டு பிடிக்கமாட்டாது; நீர் இஸ்ரவேலின்மேல் ராஜாவாயிருப்பீர்; அப்பொழுது நான் உமக்கு இரண்டாவதாயிருப்பேன்; அப்படி நடக்கும் என்று என் தகப்பனாகிய சவுலும் அறிந்திருக்கிறார் என்றான்.
அவர்கள் இருவரும் கர்த்தருக்கு முன்பாக உடன்படிக்கைபண்ணின பின்பு, தாவீது காட்டில் இருந்து விட்டான்; யோனத்தானோ தன் வீட்டிற்குப் போனான்.
பின்பு சீப் ஊரார் கிபியாவிலிருக்கிற சவுலிடத்தில் வந்து: தாவீது எங்களிடத்தில் எஷிமோனுக்குத் தெற்கே ஆகிலா என்னும் மலைக்காட்டிலுள்ள அரணிப்பான இடங்களில் ஒளித்துக்கொண்டிருக்கிறான் அல்லவா?
இப்போதும் ராஜாவே, நீர் உம்முடைய மனவிருப்பத்தின்படி இறங்கி வாரும்; அவனை ராஜாவின் கையில் ஒப்புக்கொடுக்க, எங்களால் ஆகும் என்றார்கள்.
அதற்கு சவுல்: நீங்கள் என்மேல் தயை வைத்ததினாலே, கர்த்தரால் ஆசீர்வதிக்கப்பட்டிருப்பீர்களாக.
நீங்கள் போய், அவன் கால் நடமாடுகிற இடத்தைப் பார்த்து, அங்கே அவனைக் கண்டவன் யார் என்பதையும் இன்னும் நன்றாய் விசாரித்து அறியுங்கள்; அவன் மகா தந்திரவாதி என்று எனக்குத் தெரிய வந்தது.
அவன் ஒளித்துக்கொண்டிருக்கும் எல்லா மறைவிடங்களையும் பார்த்தறிந்து கொண்டு, நிச்சய செய்தி எனக்குக் கொண்டுவாருங்கள்; அப்பொழுது நான் உங்களோடே கூடவந்து, அவன் தேசத்தில் இருந்தால், யூதாவிலிருக்கிற சகல ஆயிரங்களுக்குள்ளும் அவனைத் தேடிப் போவேன் என்றான்.
அப்பொழுது அவர்கள் எழுந்து, சவுலுக்கு முன்னாலே சீப் ஊருக்குப் போனார்கள்; தாவீதும் அவன் மனுஷரும் எஷிமோனுக்குத் தெற்கான அந்தர வெளியாகிய மாகோன் வனாந்தரத்தில் இருந்தார்கள்.
சவுலும் அவன் மனுஷரும் தாவீதைத் தேடவருகிறார்கள் என்று அவனுக்கு அறிவிக்கப்பட்டபோது, அவன் கன்மலையிலிருந்து இறங்கி, மாகோன் வனாந்தரத்திலே தங்கினான்; அதைச் சவுல் கேள்விப்பட்டு, மாகோன் வனாந்தரத்திலே தாவீதைப் பின்தொடர்ந்தான்.
சவுல் மலையின் இந்தப்பக்கத்திலும், தாவீதும், அவன் மனுஷரும் மலையின் அந்தப்பக்கத்திலும் நடந்தார்கள்; சவுலுக்குத் தப்பிப்போக, தாவீது தீவிரித்தபோது, சவுலும் அவன் மனுஷரும் தாவீதையும் அவன் மனுஷரையும் பிடிக்கத்தக்கதாய் அவர்களை வளைந்து கொண்டார்கள்.
அந்தச் சமயத்தில் ஒரு ஆள் சவுலிடத்தில் வந்து: நீர் சீக்கிரமாய் வாரும்; பெலிஸ்தர் தேசத்தின்மேல் படையெடுத்து வந்திருக்கிறார்கள் என்றான்.
அதனால் சவுல் தாவீதைப் பின்தொடருகிறதை விட்டுத் திரும்பி, பெலிஸ்தரை எதிர்க்கும்படி போனான்; ஆதலால் அவ்விடத்திற்குச் சேலா அம்மாலிகோத் என்று பேரிட்டார்கள்.
தாவீது அவ்விடத்தைவிட்டுப் புறப்பட்டு, என்கேதியிலுள்ள அரணிப்பான இடங்களில் தங்கினான்.