பின்பு நாம் திரும்பி, பாசானுக்குப் போகிற வழியாய்ப் போனோம்; பாசானின் ராஜாவாகிய ஓக் தன்னுடைய சகல ஜனங்களோடும் நம்மோடே எதிர்த்து யுத்தம்பண்ணும்படி புறப்பட்டு, எத்ரேயிக்கு வந்தான்.
அப்பொழுது கர்த்தர் என்னை நோக்கி: அவனுக்குப் பயப்படவேண்டாம்; அவனையும் அவனுடைய ஜனங்கள் எல்லாரையும் அவன் தேசத்தையும் உன் கையில் ஒப்புக்கொடுத்தேன்; எஸ்போனிலே குடியிருந்த எமோரியரின் ராஜாவாகிய சீகோனுக்கு நீ செய்தது போல, அவனுக்கும் செய்வாய் என்றார்.
அப்படியே நம்முடைய தேவனாகிய கர்த்தர் பாசானின் ராஜாவாகிய ஓகையும் அவனுடைய சகல ஜனங்களையும் நம்முடைய கையில் ஒப்புக்கொடுத்தார்; அவனுக்கு ஒருவரும் மீதியாயிராமற்போகுமட்டும் அவனை முறிய அடித்தோம்.
அக்காலத்திலே அவனுடைய பட்டணங்களையெல்லாம் பிடித்தோம்; அவர்களிடத்தில் நாம் பிடித்துக்கொள்ளாத பட்டணம் இல்லை; பாசானிலிருந்த ஓகின் ராஜ்யமான அறுபது பட்டணங்களுள்ள அர்கோப் தேசம் முழுவதையும் பிடித்தோம்.
அந்தப் பட்டணங்களெல்லாம் உயர்ந்த மதில்களாலும் வாசல்களாலும் தாழ்ப்பாள்களாலும் அரணாக்கப்பட்டிருந்தது; அவைகள் அன்றி, மதிலில்லாத பட்டணங்களும் அநேகம்.
அவைகளையும் சங்காரம்பண்ணினோம்; நாம் எஸ்போனின் ராஜாவாகிய சீகோனுக்குச் செய்ததுபோல, அந்த எல்லாப் பட்டணங்களிலுமுள்ள புருஷரையும் ஸ்திரீகளையும் பிள்ளைகளையும் சங்காரம்பண்ணினோம்.
ஆனாலும் பட்டணங்களிலுள்ள ஆஸ்தியையும் சகல மிருகஜீவன்களையும் நமக்கென்று கொள்ளையிட்டோம்.
இப்படியே யோர்தானுக்கு இப்புறத்திலுள்ள அர்னோன் நதிதொடங்கி, எர்மோன் மலைவரைக்குமுள்ள தேசத்தை நாம் அக்காலத்தில் எமோரியருடைய இரண்டு ராஜாக்களிடத்திலுமிருந்து பிடித்தோம்.
சீதோனியர் எர்மோனைச் சீரியோன் என்கிறார்கள்; எமோரியரோ அதைச் சேனீர் என்கிறார்கள்.
சமனான நாட்டின் எல்லாப் பட்டணங்களையும், கீலேயாத் முழுவதையும், சல்காயி, எத்ரேயி என்னும் பாசானிலிருந்த ஓகுடைய ராஜ்யத்தின் பட்டணங்கள் மட்டுமுள்ள பாசான் முழுவதையும் பிடித்தோம்.
மீந்திருந்த இராட்சதரில் பாசானின் ராஜாவாகிய ஓக் என்பவன் மாத்திரம் தப்பியிருந்தான்; இரும்பினாற் செய்த அவனுடைய கட்டில் மனிதருடைய கை முழத்தின்படியே, ஒன்பது முழ நீளமும் நாலு முழ அகலமுமாயிருந்தது; அது அம்மோன் புத்திரருடைய ரப்பாபட்டணத்தில் இருக்கிறதல்லவா?
மனாசேயின் குமாரனாகிய யாவீர் அர்கோப் சீமை முழுவதையும் கேசூரியர் மாகாத்தியர் என்பவர்களுடைய எல்லைமட்டும் கட்டிக்கொண்டு, அதற்குத் தன் நாமத்தின்படியே பாசான் அவோத்யாயீர் என்று பேரிட்டான், அது இந்நாள் வரைக்கும் வழங்கிவருகிறது.
மாகீருக்குக் கீலேயாத்தைக் கொடுத்தேன்.
மேலும் கீலேயாத் தொடங்கி, அர்னோன் நதி ஓடுகிற பள்ளத்தாக்கும், கடையாந்தரமுமான அம்மோன் புத்திரரின் எல்லையாகிய யாபோக்கு ஆறுமட்டும் இருக்கிற தேசத்தையும்,
கின்னரேத் தொடங்கி அஸ்தோத் பிஸ்காவுக்குத் தாழ்வாய்க் கிழக்கே இருக்கிற உப்புக்கடலான சமனான வெளியின் கடல்மட்டும், யோர்தானின் எல்லைக்குள் அடங்கிய சமனான வெளியையும், ரூபனியருக்கும் காத்தியருக்கும் கொடுத்தேன்.
அக்காலத்திலே நான் உங்களை நோக்கி: உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களுக்கு இந்த தேசத்தைச் சுதந்தரமாகக் கொடுத்தார்; யுத்தஞ்செய்யத்தக்கவர்களாகிய நீங்கள் எல்லாரும் இஸ்ரவேல் புத்திரரான உங்கள் சகோதரருக்கு முன்னே ஆயுதபாணிகளாக நடந்துபோங்கள்.
உங்கள் மனைவிகளும் உங்கள் பிள்ளைகளும் உங்கள் ஆடுமாடுகளும் மாத்திரம் நான் உங்களுக்குக் கொடுத்த உங்கள் பட்டணங்களில் இருக்கட்டும்; உங்களுக்குத் திரளான ஆடுமாடுகள் உண்டென்று அறிவேன்.
ஆனாலும் கர்த்தர் உங்களை இளைப்பாறப்பண்ணினதுபோல, உங்கள் சகோதரரையும் இளைப்பாறப்பண்ணி, யோர்தானுக்கு அப்புறத்தில் உங்கள் தேவனாகிய கர்த்தர் கொடுக்கிற தேசத்தைச் சுதந்தரித்துக்கொள்ளுமட்டும் நீங்கள் இருந்து, பின்பு அவரவர் நான் உங்களுக்குக் கொடுத்த உங்கள் சுதந்தரத்துக்குத் திரும்புவீர்களாக என்றேன்.
அக்காலத்திலே நான் யோசுவாவை நோக்கி: உங்கள் தேவனாகிய கர்த்தர் அந்த இரண்டு ராஜாக்களுக்கும் செய்தவைகளையெல்லாம் உன் கண்கள் கண்டது; நீ போய்ச் சேரும் எல்லா ராஜ்யங்களுக்கும் கர்த்தர் அப்படியே செய்வார்.
அவர்களுக்குப் பயப்படீர்களாக; உங்கள் தேவனாகிய கர்த்தர் தாமே உங்களுக்காக யுத்தம் பண்ணுவார் என்று சொன்னேன்.
நான் கடந்துபோய் யோர்தானுக்கு அப்புறத்திலுள்ள அந்த நல்ல தேசத்தையும், அந்த நல்ல மலையையும், லீபனோனையும் பார்க்கும்படி உத்தரவு கொடுத்தருளும் என்று வேண்டிக்கொண்டேன்.
கர்த்தரோ உங்கள் நிமித்தம் என்மேல் கோபங்கொண்டு, எனக்குச் செவிகொடாமல், என்னை நோக்கி: போதும், இனி இந்தக் காரியத்தைக்குறித்து என்னோடே பேசவேண்டாம்.
நீ பிஸ்காவின் கொடுமுடியில் ஏறி, உன் கண்களை மேற்கிலும் வடக்கிலும் தெற்கிலும் கிழக்கிலும் ஏறெடுத்து, உன் கண்களினாலே அதைப் பார்; இந்த யோர்தானை நீ கடந்து போவதில்லை.
நீ யோசுவாவுக்குக் கட்டளை கொடுத்து, அவனைத் திடப்படுத்திப் பலப்படுத்து; அவன் இந்த ஜனங்களுக்கு முன்பாகக் கடந்துபோய், அவனே நீ காணும் தேசத்தை அவர்களுக்குப் பங்கிட்டுக்கொடுப்பான் என்றார்.
பின்பு பெத்பெயோருக்கு எதிரான பள்ளத்தாக்கில் தங்கியிருந்தோம்.