But love ye your enemies, and do good, and lend, hoping for nothing again; and your reward shall be great, and ye shall be the children of the Highest: for he is kind unto the unthankful and to the evil.
ஆபிப் மாதத்தைக் கவனித்திருந்து, அதில் உன் தேவனாகிய கர்த்தருக்குப் பஸ்காவை ஆசரிக்கக்கடவாய்; ஆபிப் மாதத்திலே இராக்காலத்தில் உன் தேவனாகிய கர்த்தர் உன்னை எகிப்திலிருந்து புறப்படப்பண்ணினார்.
கர்த்தர் தமது நாமம் விளங்கும்படி தெரிந்துகொள்ளும் ஸ்தானத்தில், உன் தேவனாகிய கர்த்தருக்குப் பஸ்காவின் பலியாகிய ஆடுமாடுகளைப் பலியிடுவாயாக.
நீ எகிப்துதேசத்திலிருந்து புறப்பட்ட நாளை நீ உயிரோடிருக்கும் நாளெல்லாம் நினைக்கும்படி, பஸ்காப் பலியுடனே புளிப்புள்ள அப்பம் புசியாமல், சிறுமையின் அப்பமாகிய புளிப்பில்லா அப்பங்களை ஏழுநாள் வரைக்கும் புசிக்கக்கடவாய்; நீ தீவிரமாய் எகிப்துதேசத்திலிருந்து புறப்பட்டபடியினால் இப்படிச் செய்யவேண்டும்.
ஏழுநாள் அளவும் உன் எல்லைகளிலெங்கும் புளிப்புள்ள அப்பம் உன்னிடத்தில் காணப்படலாகாது; நீ முதல் நாள் சாயங்காலத்தில் இட்ட பலியின் மாம்சத்தில் ஏதாகிலும் இராமுழுதும் விடியற்காலம் வரைக்கும் வைக்கவேண்டாம்.
உன் தேவனாகிய கர்த்தர் உனக்குக்கொடுக்கும் உன்னுடைய வாசல்களில் எதிலும் நீ பஸ்காவை அடிக்கவேண்டாம்.
உன் தேவனாகிய கர்த்தர் தமது நாமம் விளங்கும்படி தெரிந்துகொள்ளும் ஸ்தானத்திலே, நீ எகிப்திலிருந்து புறப்பட்ட நேரமாகிய சாயங்காலத்திலே சூரியன் அஸ்தமிக்கிறபோது பஸ்காவை அடித்து,
உன் தேவனாகிய கர்த்தர் தெரிந்துகொண்ட ஸ்தானத்திலே, அதைப் பொரித்துப் புசித்து, விடியற்காலத்திலே உன் கூடாரங்களுக்குத் திரும்பிப்போவாயாக.
நீ ஆறு நாளும் புளிப்பில்லாத அப்பம் புசிக்கவேண்டும், ஏழாம் நாள் உன் தேவனாகிய கர்த்தருக்கு ஆசரிக்கப்படும் நாளாயிருக்கும்; அதிலே யாதொரு வேலையும் செய்யவேண்டாம்.
ஏழு வாரங்களை எண்ணுவாயாக; அறுப்பு அறுக்கத் தொடங்கும் காலமுதல் நீ அந்த ஏழு வாரங்களையும் எண்ணவேண்டும்.
அவைகள் முடிந்தபோது வாரங்களின் பண்டிகையை உன் தேவனாகிய கர்த்தருக்கு என்று ஆசரித்து, உன் தேவனாகிய கர்த்தர் உன்னை ஆசீர்வதித்ததற்குத் தக்கதாய் உன் கைக்கு நேர்ந்த மனப்பூர்வமான காணிக்கையாகிய பகுதியைச் செலுத்தி,
உன் தேவனாகிய கர்த்தர் தமது நாமம் விளங்கும்படி தெரிந்துகொள்ளும் ஸ்தானத்திலே, நீயும், உன் குமாரனும், உன் குமாரத்தியும், உன் வேலைக்காரனும், உன் வேலைக்காரியும், உன் வாசல்களில் இருக்கிற லேவியனும், உன்னிடத்தில் இருக்கிற பரதேசியும், திக்கற்ற பிள்ளையும், விதவையும், உன் தேவனாகிய கர்த்தருடைய சந்நிதியில் சந்தோஷப்பட்டு,
நீ எகிப்தில் அடிமையாயிருந்ததை நினைத்து, இந்தக் கட்டளைகளைக் கைக்கொண்டு இவைகளின்படி செய்யக்கடவாய்.
நீ உன் களத்தின் பலனையும் உன் ஆலையின் பலனையும் சேர்த்தபின்பு, கூடாரப்பண்டிகையை ஏழு நாள் ஆசரித்து,
உன் பண்டிகையில் நீயும், உன் குமாரனும், உன் குமாரத்தியும், உன் வேலைக்காரனும், உன் வேலைக்காரியும், உன் வாசல்களில் இருக்கிற லேவியனும், பரதேசியும், திக்கற்ற பிள்ளையும், விதவையும் சந்தோஷப்படக்கடவீர்கள்;
உனக்கு உண்டான எல்லா வரத்திலும் உன் கைகளுடைய எல்லாக் கிரியையிலும் உன் தேவனாகிய கர்த்தர் உன்னை ஆசீர்வதித்தபடியினால், கர்த்தர் தெரிந்துகொள்ளும் ஸ்தானத்தில் உன் தேவனாகிய கர்த்தருக்கு ஏழு நாளளவும் பண்டிகையை ஆசரித்துச் சந்தோஷமாயிருப்பாயாக.
வருஷத்தில் மூன்று தரம் புளிப்பில்லாத அப்பப்பண்டிகையிலும், வாரங்களின் பண்டிகையிலும், கூடாரப்பண்டிகையிலும், உன் ஆண்மக்கள் எல்லாரும் உன் தேவனாகிய கர்த்தர் தெரிந்துகொள்ளும் ஸ்தானத்திலே, அவர் சந்நிதிக்கு முன்பாக வந்து காணப்படக்கடவர்கள்.
ஆனாலும் அவர்கள் கர்த்தருடைய சந்நிதியில் வெறுங்கையோடே வராமல், உன் தேவனாகிய கர்த்தர் உனக்கு அருளிய ஆசீர்வாதத்திற்குத்தக்கதாக, அவனவன் தன் தன் தகுதிக்கு ஏற்றபடி காணிக்கையைக் கொண்டுவரக்கடவன்.
உன் தேவனாகிய கர்த்தர் உன் கோத்திரங்கள்தோறும் உனக்குக் கொடுக்கும் வாசல்களிலெல்லாம், நியாயாதிபதிகளையும் தலைவரையும் ஏற்படுத்துவாயாக; அவர்கள் நீதியுடன் ஜனங்களுக்கு நியாயத்தீர்ப்புச் செய்யக்கடவர்கள்.