But the God of all grace, who hath called us unto his eternal glory by Christ Jesus, after that ye have suffered a while, make you perfect, stablish, strengthen, settle you.
விசுவாசத்தில் பலவீனமுள்ளவனைச் சேர்த்துக்கொள்ளுங்கள்; ஆனாலும் அவனுடைய மன ஐயங்களைக் குற்றமாய் நிர்ணயிக்காமலிருங்கள்.
ஒருவன் எந்தப் பதார்த்தத்தையும் புசிக்கலாமென்று நம்புகிறான்; பலவீனனோ மரக்கறிகளைமாத்திரம் புசிக்கிறான்.
புசிக்கிறவன் புசியாதிருக்கிறவனை அற்பமாயெண்ணாதிருப்பானாக; புசியாதிருக்கிறவனும் புசிக்கிறவனைக் குற்றவாளியாகத் தீர்க்காதிருப்பானாக; தேவன் அவனை ஏற்றுக்கொண்டாரே.
மற்றொருவனுடைய வேலைக்காரனைக் குற்றவாளியாகத் தீர்க்கிறதற்கு நீ யார்? அவன் நின்றாலும் விழுந்தாலும் அவனுடைய எஜமானுக்கே அவன் உத்தரவாதி; அவன் நிலைநிறுத்தப்படுவான்; தேவன் அவனை நிலைநிறுத்த வல்லவராயிருக்கிறாரே.
அன்றியும், ஒருவன் ஒருநாளை மற்றொருநாளிலும் விசேஷமாக எண்ணுகிறான்; வேறொருவன் எல்லா நாட்களையும் சரியாக எண்ணுகிறான்; அவனவன் தன்தன் மனதிலே முழு நிச்சயத்தை உடையவனாயிருக்கக்கடவன்.
நாம் பிழைத்தாலும் கர்த்தருக்கென்று பிழைக்கிறோம், நாம் மரித்தாலும் கர்த்தருக்கென்று மரிக்கிறோம்; ஆகையால் பிழைத்தாலும் மரித்தாலும் நாம் கர்த்தருடையவர்களாயிருக்கிறோம்.
இப்படியிருக்க, நீ உன் சகோதரனைக் குற்றவாளியென்று தீர்க்கிறதென்ன? நீ உன் சகோதரனை அற்பமாய் எண்ணுகிறதென்ன? நாமெல்லாரும் கிறிஸ்துவினுடைய நியாயாசனத்திற்கு முன்பாக நிற்போமே.
அந்தப்படி: முழங்கால் யாவும் எனக்கு முன்பாக முடங்கும், நாவு யாவும் தேவனை அறிக்கைபண்ணும் என்று என் ஜீவனைக்கொண்டு உரைக்கிறேன் என்பதாய்க் கர்த்தர் சொல்லுகிறார் என்று எழுதியிருக்கிறது.
ஆதலால் நம்மில் ஒவ்வொருவனும் தன்னைக்குறித்து தேவனுக்குக் கணக்கொப்புவிப்பான்.
இப்படியிருக்க, நாம் இனிமேல் ஒருவரையொருவர் குற்றவாளிகளென்று தீர்க்காதிருப்போமாக. ஒருவனும் தன் சகோதரனுக்கு முன்பாகத் தடுக்கலையும் இடறலையும் போடலாகாதென்றே தீர்மானித்துக்கொள்ளுங்கள்.
ஒரு பொருளும் தன்னிலே தீட்டுள்ளதல்லவென்று கர்த்தராகிய இயேசுவுக்குள் அறிந்து நிச்சயித்திருக்கிறேன்; ஒரு பொருளைத் தீட்டுள்ளதென்று எண்ணிக்கொள்ளுகிறவனெவனோ அவனுக்கு அது தீட்டுள்ளதாயிருக்கும்.
போஜனத்தினாலே உன் சகோதரனுக்கு விசனமுண்டாக்கினால், நீ அன்பாய் நடக்கிறவனல்ல; அவனை உன் போஜனத்தினாலே கெடுக்காதே, கிறிஸ்து அவனுக்காக மரித்தாரே.
உங்கள் நன்மை தூஷிக்கப்பட இடங்கொடாதிருங்கள்.
தேவனுடைய ராஜ்யம் புசிப்பும் குடிப்புமல்ல, அது நீதியும் சமாதானமும் பரிசுத்த ஆவியினாலுண்டாகும் சந்தோஷமுமாயிருக்கிறது.
போஜனத்தினிமித்தம் தேவனுடைய கிரியையை அழித்துப்போடாதே. எந்தப் பதார்த்தமும் சுத்தமுள்ளதுதான்; ஆனாலும் இடறலுண்டாகப் புசிக்கிறவனுக்கு அது தீமையாயிருக்கும்.
மாம்சம் புசிக்கிறதும், மதுபானம்பண்ணுகிறதும், மற்றெதையாகிலும் செய்கிறதும், உன் சகோதரன் இடறுகிறதற்காவது, தவறுகிறதற்காவது பலவீனப்படுகிறதற்காவது ஏதுவாயிருந்தால், அவைகளில் ஒன்றையும் செய்யாமலிருப்பதே நன்மையாயிருக்கும்.
உனக்கு விசுவாசமிருந்தால் அது தேவனுக்கு முன்பாக உன்மட்டும் இருக்கட்டும். நல்லதென்று நிச்சயித்த காரியத்தில் தன்னைக் குற்றவாளியாக்காதவன் பாக்கியவான்.
ஒருவன் சமுசயப்படுகிறவனாய்ப் புசித்தால், அவன் விசுவாசமில்லாமல் புசிக்கிறபடியினால், ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படுகிறான். விசுவாசத்தினாலே வராத யாவும் பாவமே.