பஸ்கா பண்டிகை வர ஆறுநாளைக்கு முன்னே இயேசு தாம் மரணத்திலிருந்து எழுப்பின லாசரு இருந்த பெத்தானியாவுக்கு வந்தார்.
அங்கே அவருக்கு இராவிருந்துபண்ணினார்கள்; மார்த்தாள் பணிவிடை செய்தாள்; லாசருவும் அவருடனேகூடப் பந்தியிருந்தவர்களில் ஒருவனாயிருந்தான்.
அப்பொழுது மரியாள் விலையேறப்பெற்ற களங்கமில்லாத நளதம் என்னும் தைலத்தில் ஒரு இராத்தல் கொண்டுவந்து, அதை இயேசுவின் பாதங்களில் பூசி, தன் தலைமயிரால் அவருடைய பாதங்களைத் துடைத்தாள்; அந்த வீடு முழுவதும் தைலத்தின் பரிமளத்தினால் நிறைந்தது.
அப்பொழுது அவருடைய சீஷரில் ஒருவனும் அவரைக் காட்டிகொடுக்கப்போகிறவனுமாகிய சீமோனுடைய குமாரனான யூதாஸ்காரியோத்து:
இந்தத் தைலத்தை முந்நூறு பணத்துக்கு விற்று, தரித்திரருக்குக் கொடாமல் போனதென்ன என்றான்.
அவன் தரித்திரரைக்குறித்துக் கவலைப்பட்டு இப்படிச் சொல்லாமல், அவன் திருடனானபடியினாலும், பணப்பையை வைத்துக்கொண்டு அதிலே போடப்பட்டதைச் சுமக்கிறவனானபடியினாலும் இப்படிச் சொன்னான்.
அப்பொழுது இயேசு: இவளை விட்டுவிடு, என்னை அடக்கம்பண்ணும் நாளுக்காக இதை வைத்திருந்தாள்.
தரித்திரர் எப்பொழுதும் உங்களிடத்தில் இருக்கிறார்கள்; நான் எப்பொழுதும் உங்களிடத்தில் இரேன் என்றார்.
அப்பொழுது யூதரில் திரளான ஜனங்கள் அவர் அங்கேயிருக்கிறதை அறிந்து, இயேசுவினிமித்தமாகமாத்திரம் அல்ல, அவர் மரித்தோரிலிருந்தெழுப்பின லாசருவைக் காணும்படியாகவும் வந்தார்கள்.
பிரதான ஆசாரியர்கள் லாசருவையும் கொலைசெய்ய ஆலோசனைபண்ணினார்கள்.
மறுநாளிலே இயேசு எருசலேமுக்கு வருகிறாரென்று பண்டிகைக்கு வந்த திரளான ஜனங்கள் கேள்விப்பட்டு,
குருத்தோலைகளைப் பிடித்துக்கொண்டு, அவருக்கு எதிர்கொண்டுபோகும்படி புறப்பட்டு: ஓசன்னா, கர்த்தருடைய நாமத்தினாலே வருகிற இஸ்ரவேலின் ராஜா ஸ்தோத்திரிக்கப்பட்டவர் என்று ஆர்ப்பரித்தார்கள்.
அல்லாமலும்: சீயோன் குமாரத்தியே, பயப்படாதே, உன் ராஜா கழுதைக்குட்டியின்மேல் ஏறிவருகிறார் என்று எழுதியிருக்கிறபிரகாரமாக,
இயேசு ஒரு கழுதைக்குட்டியைக் கண்டு அதின்மேல் ஏறிப்போனார்.
இவைகளை அவருடைய சீஷர்கள் துவக்கத்திலே அறியவில்லை. இயேசு மகிமையடைந்த பின்பு, இப்படி அவரைக்குறித்து எழுதியிருக்கிறதையும், தாங்கள் இப்படி அவருக்குச் செய்ததையும் நினைவுகூர்ந்தார்கள்.
அன்றியும் அவருடனேகூட இருந்த ஜனங்கள் அவர் லாசருவைக் கல்லறையிலிருந்து வெளியே வரவழைத்து, அவனை உயிரோடே எழுப்பினாரென்று சாட்சி கொடுத்தார்கள்.
அப்படிப்பட்ட அற்புதத்தை அவர் செய்தார் என்று ஜனங்கள் கேள்விப்பட்டதினால் அவர்கள் அவருக்கு எதிர்கொண்டுபோனார்கள்.
அப்பொழுது பரிசேயர் ஒருவரையொருவர் நோக்கி: நீங்கள் செய்கிறதெல்லாம் வீணென்று அறிகிறதில்லையா? இதோ, உலகமே அவனுக்குப் பின்சென்று போயிற்றே என்றார்கள்.
பண்டிகையில் ஆராதனை செய்யவந்தவர்களில் சில கிரேக்கர் இருந்தார்கள்.
அவர்கள் கலிலேயா நாட்டுப் பெத்சாயிதா ஊரானாகிய பிலிப்புவினிடத்தில் வந்து: ஐயா, இயேசுவைக் காண விரும்புகிறோம் என்று அவனைக் கேட்டுக்கொண்டார்கள்.
பிலிப்பு வந்து, அதை அந்திரேயாவுக்கு அறிவித்தான்; பின்பு அந்திரேயாவும் பிலிப்புவும் அதை இயேசுவுக்கு அறிவித்தார்கள்.
அப்பொழுது இயேசு அவர்களை நோக்கி: மனுஷகுமாரன் மகிமைப்படும்படியான வேளை வந்தது.
மெய்யாகவே மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், கோதுமை மணியானது நிலத்தில் விழுந்து சாகாவிட்டால் தனித்திருக்கும், செத்ததேயாகில் மிகுந்த பலனைக்கொடுக்கும்.
தன் ஜீவனைச் சிநேகிக்கிறவன் அதை இழந்துபோவான்; இந்த உலகத்தில் தன் ஜீவனை வெறுக்கிறவனோ அவன் அதை நித்திய ஜீவகாலமாய்க் காத்துக்கொள்ளுவான்.
ஒருவன் எனக்கு ஊழியஞ்செய்கிறவனானால் என்னைப் பின்பற்றக்கடவன், நான் எங்கே இருக்கிறேனோ அங்கே என் ஊழியக்காரனும் இருப்பான்; ஒருவன் எனக்கு ஊழியஞ்செய்தால் அவனைப் பிதாவானவர் கனம்பண்ணுவார்.
இப்பொழுது என் ஆத்துமா கலங்குகிறது, நான் என்ன சொல்லுவேன். பிதாவே, இந்த வேளையினின்று என்னை இரட்சியும் என்று சொல்வேனோ; ஆகிலும், இதற்காகவே இந்த வேளைக்குள் வந்தேன்.
பிதாவே, உமது நாமத்தை மகிமைப்படுத்தும் என்றார். அப்பொழுது: மகிமைப்படுத்தினேன், இன்னமும் மகிமைப்படுத்துவேன் என்கிற சத்தம் வானத்திலிருந்து உண்டாயிற்று.
அங்கே நின்று கொண்டிருந்து, அதைக் கேட்ட ஜனங்கள்: இடிமுழக்கமுண்டாயிற்று என்றார்கள். வேறுசிலர்: தேவதூதன் அவருடனே பேசினான் என்றார்கள்.
இயேசு அவர்களை நோக்கி: இந்தச் சத்தம் என்னிமித்தம் உண்டாகாமல் உங்கள் நிமித்தமே உண்டாயிற்று.
இப்பொழுதே இந்த உலகத்துக்கு நியாயத்தீர்ப்பு உண்டாகிறது; இப்பொழுதே இந்த உலகத்தின் அதிபதி புறம்பாகத் தள்ளப்படுவான்.
நான் பூமியிலிருந்து உயர்த்தப்பட்டிருக்கும்போது, எல்லாரையும் என்னிடத்தில் இழுத்துக்கொள்ளுவேன் என்றார்.
தாம் இன்னவிதமான மரணமாய் மரிக்கப்போகிறாரென்பதைக் குறிக்கும்படி இப்படிச் சொன்னார்.
ஜனங்கள் அவரை நோக்கி: கிறிஸ்து என்றென்றைக்கும் இருக்கிறார் என்று வேதத்தில் சொல்லியதை நாங்கள் கேட்டிருக்கிறோம், அப்படியிருக்க மனுஷகுமாரன் உயர்த்தப்படவேண்டியதென்று எப்படிச் சொல்லுகிறீர்; இந்த மனுஷகுமாரன் யார் என்றார்கள்.
அதற்கு இயேசு: இன்னும் கொஞ்சக்காலம் ஒளி உங்களிடத்தில் இருக்கும்; இருளில் நீங்கள் அகப்படாதபடிக்கு ஒளி உங்களோடிருக்கையில் நடவுங்கள்; இருளில் நடக்கிறவன் தான் போகிற இடம் இன்னதென்று அறியான்.
ஒளி உங்களோடிருக்கையில் நீங்கள் ஒளியின் பிள்ளைகளாகும்படிக்கு, ஒளியினிடத்தில் விசுவாசமாயிருங்கள் என்றார். இவைகளை இயேசு சொல்லி, அவர்களைவிட்டு மறைந்தார்.
அவர் இத்தனை அற்புதங்களை அவர்களுக்கு முன்பாகச் செய்திருந்தும், அவர்கள் அவரை விசுவாசிக்கவில்லை.
கர்த்தாவே, எங்கள் மூலமாய்க் கேள்விப்பட்டதை விசுவாசித்தவன் யார்? கர்த்தருடைய புயம் யாருக்கு வெளிப்பட்டது என்று ஏசாயா தீர்க்கதரிசி சொன்ன வசனம் நிறைவேறும்படி இப்படி நடந்தது.
ஆகையால் அவர்கள் விசுவாசிக்கமாட்டாமல்போனார்கள். ஏனெனில் ஏசாயா பின்னும்:
அவர்கள் கண்களினால் காணாமலும், இருதயத்தினால் உணராமலும், குணப்படாமலும் இருக்கும்படிக்கும், நான் அவர்களை ஆரோக்கியமாக்காமல் இருக்கும்படிக்கும், அவர்களுடைய கண்களை அவர் குருடாக்கி, அவர்கள் இருதயத்தைக் கடினமாக்கினார் என்றான்.
ஏசாயா அவருடைய மகிமையைக் கண்டு, அவரைக்குறித்துப் பேசுகிறபோது இவைகளைச் சொன்னான்.