The Lord is not slack concerning his promise, as some men count slackness; but is longsuffering to us-ward, not willing that any should perish, but that all should come to repentance.
வேவுகாரர் காண்பித்த வழியாக இஸ்ரவேலர் வருகிறார்கள் என்று தெற்கே வாசம்பண்ணுகிற கானானியனாகிய ஆராத் ராஜா கேள்விப்பட்டபோது, அவன் இஸ்ரவேலருக்கு விரோதமாக யுத்தம் பண்ணி, அவர்களில் சிலரைச் சிறைபிடித்துக்கொண்டுபோனான்.
அப்பொழுது இஸ்ரவேலர் கர்த்தரை நோக்கி: தேவரீர் இந்த ஜனங்களை எங்கள் கையில் ஒப்புக்கொடுத்தால், அவர்களுடைய பட்டணங்களைச் சங்காரம்பண்ணுவோம் என்று பிரதிக்கினை பண்ணினார்கள்.
கர்த்தர் இஸ்ரவேலின் சத்தத்துக்குச் செவிகொடுத்து, அவர்களுக்குக் கானானியரை ஒப்புக்கொடுத்தார்; அப்பொழுது அவர்களையும் அவர்கள் பட்டணங்களையும் சங்காரம்பண்ணி, அவ்விடத்திற்கு ஓர்மா என்று பேரிட்டார்கள்.
அவர்கள் ஏதோம் தேசத்தைச் சுற்றிப்போகும்படிக்கு, ஓர் என்னும் மலையைவிட்டு, சிவந்த சமுத்திரத்தின் வழியாய்ப் பிரயாணம்பண்ணினார்கள்; வழியினிமித்தம் ஜனங்கள் மனமடிவடைந்தார்கள்.
ஜனங்கள் தேவனுக்கும் மோசேக்கும் விரோதமாகப் பேசி: நாங்கள் வனாந்தரத்திலே சாகும்படி நீங்கள் எங்களை எகிப்து தேசத்திலிருந்து வரப்பண்ணினதென்ன? இங்கே அப்பமும் இல்லை, தண்ணீரும் இல்லை; இந்த அற்பமான உணவு எங்கள் மனதுக்கு வெறுப்பாயிருக்கிறது என்றார்கள்.
அப்பொழுது கர்த்தர் கொள்ளிவாய்ச் சர்ப்பங்களை ஜனங்களுக்குள்ளே அனுப்பினார்; அவைகள் ஜனங்களைக் கடித்ததினால் இஸ்ரவேலருக்குள்ளே அநேக ஜனங்கள் செத்தார்கள்.
அப்பொழுது கர்த்தர் மோசேயை நோக்கி: நீ ஒரு கொள்ளிவாய்ச் சர்ப்பத்தின் உருவத்தைச் செய்து, அதை ஒரு கம்பத்தின்மேல் தூக்கிவை; கடிக்கப்பட்டவன் எவனோ அவன் அதை நோக்கிப்பார்த்தால் பிழைப்பான் என்றார்.
அப்படியே மோசே ஒரு வெண்கலச்சர்ப்பத்தை உண்டாக்கி, அதை ஒரு கம்பத்தின்மேல் தூக்கிவைத்தான்; சர்ப்பம் ஒருவனைக் கடித்தபோது, அவன் அந்த வெண்கலச் சர்ப்பத்தை நோக்கிப்பார்த்துப் பிழைப்பான்.
ஆர் என்னும் ஸ்தலத்துக்குப் பாயும் நீரோடையும் மோவாபின் எல்லையைச் சார்ந்திருக்கிறது என்னும் வசனம் கர்த்தருடைய யுத்த புஸ்தகத்தில் எழுதியிருக்கிறது.
அங்கேயிருந்து பேயேருக்குப் போனார்கள்; ஜனங்களைக் கூடிவரச்செய், அவர்களுக்குத் தண்ணீர் கொடுப்பேன் என்று கர்த்தர் மோசேக்குச் சொன்ன ஊற்று இருக்கிற இடம் அதுதான்.
அப்பொழுது இஸ்ரவேலர் பாடின பாட்டாவது: ஊற்றுத் தண்ணீரே, பொங்கிவா; அதைக்குறித்துப் பாடுவோம் வாருங்கள்.
நியாயப்பிரமாணிக்கனின் ஏவுதலால் அதிபதிகள் கிணற்றைத் தோண்டினார்கள்; ஜனத்தின் மேன்மக்கள் தங்கள் தண்டாயுதங்களைக்கொண்டு தோண்டினார்கள் என்று பாடினார்கள்.
அந்த வனாந்தரத்திலிருந்து மாத்தனாவுக்கும், மாத்தனாவிலிருந்து நகாலியேலுக்கும், நகாலியேலிலிருந்து பாமோத்துக்கும்,
பள்ளத்தாக்கிலுள்ள மோவாபின் வெளியில் இருக்கிற பாமோத்திலிருந்து எஷிமோனை நோக்கும் பிஸ்காவின் உச்சிக்கும் போனார்கள்.
அப்பொழுது இஸ்ரவேலர் எமோரியரின் ராஜாவாகிய சீகோனிடத்தில் ஸ்தானாபதிகளை அனுப்பி:
உமது தேசத்தின் வழியாய்க் கடந்துபோகும்படி உத்தவு கொடுக்கவேண்டும்; நாங்கள் வயல்களிலும், திராட்சத்தோட்டங்களிலும் போகாமலும், துரவுகளின் தண்ணீரைக் குடியாமலும், உமது எல்லையைக் கடந்துபோகுமட்டும் ராஜபாதையில் நடந்துபோவோம் என்று சொல்லச்சொன்னார்கள்.
சீகோன் தன் எல்லை வழியாய்க் கடந்துபோக இஸ்ரவேலுக்கு உத்தரவு கொடாமல், தன் ஜனங்களெல்லாரையும் கூட்டிக்கொண்டு, இஸ்ரவேலருக்கு விரோதமாக வனாந்தரத்திலே புறப்பட்டு, யாகாசுக்கு வந்து, இஸ்ரவேலரோடே யுத்தம்பண்ணினான்.
இஸ்ரவேலர் அவனைப் பட்டயக்கருக்கினால் வெட்டி, அர்னோன் தொடங்கி அம்மோன் புத்திரரின் தேசத்தைச்சார்ந்த யாப்போக்குவரைக்குமுள்ள அவனுடைய தேசத்தைக் கட்டிக்கொண்டார்கள்; அம்மோன் புத்திரரின் எல்லை அரணிப்பானதாயிருந்தது.
இஸ்ரவேலர் அந்தப் பட்டணங்கள் யாவையும் பிடித்து, எஸ்போனிலும் அதைச் சார்ந்த எல்லாக் கிராமங்களிலும் எமோரியருடைய எல்லாப் பட்டணங்களிலும் குடியிருந்தார்கள்.
எஸ்போனானது எமோரியரின் ராஜாவாகிய சீகோனின் பட்டணமாயிருந்தது; அவன் மோவாபியரின் முந்தின ராஜாவுக்கு விரோதமாக யுத்தம்பண்ணி, அர்னோன் வரைக்கும் இருந்த அவன் தேசத்தையெல்லாம் அவன் கையிலிருந்து பறித்துக்கொண்டான்.
பின்பு, மோசே யாசேர் பட்டணத்துக்கு வேவுபார்க்கிறவர்களை அனுப்பினான்; அவர்கள் அதைச்சேர்ந்த கிராமங்களைக் கட்டிக்கொண்டு, அங்கே இருந்த எமோரியரைத் துரத்திவிட்டார்கள்.
பின்பு பாசானுக்குப் போகிற வழியாய்த் திரும்பிவிட்டார்கள்; அப்பொழுது பாசான் ராஜாவாகிய ஓக் என்பவன் தன் சமஸ்த ஜனங்களோடும் அவர்களை எதிர்த்து யுத்தம்பண்ணும்படிக்கு, எத்ரேயுக்குப் புறப்பட்டு வந்தான்.
கர்த்தர் மோசேயை நோக்கி: அவனுக்குப் பயப்படவேண்டாம்; அவனையும் அவன் ஜனங்கள் எல்லாரையும், அவன் தேசத்தையும் உன் கையில் ஒப்புக்கொடுத்தேன்; எஸ்போனிலே வாசமாயிருந்த எமோரியரின் ராஜாவாகிய சீகோனுக்கு நீ செய்தபடியே இவனுக்கும் செய்வாய் என்றார்.
அப்படியே ஒருவரும் உயிருடன் மீதியாயிராதபடிக்கு அவனையும், அவன் குமாரரையும், அவனுடைய சகல ஜனங்களையும் வெட்டிப்போட்டு, அவன் தேசத்தைக் கட்டிக்கொண்டார்கள்.