Then Peter said unto them, Repent, and be baptized every one of you in the name of Jesus Christ for the remission of sins, and ye shall receive the gift of the Holy Ghost.
எட்டாம் நாளிலே மோசே ஆரோனையும் அவன் குமாரரையும் இஸ்ரவேலின் மூப்பரையும் அழைத்து,
ஆரோனை நோக்கி: நீ பாவநிவாரணபலியாகப் பழுதற்ற ஒரு கன்றுக்குட்டியையும், சர்வாங்க தகனபலியாகப் பழுதற்ற ஒரு ஆட்டுக்கடாவையும் தெரிந்துகொண்டு, கர்த்தருடைய சந்நிதியில் பலியிடக்கடவாய்.
மேலும் இஸ்ரவேல் புத்திரரை நோக்கி: கர்த்தருடைய சந்நிதியில் பலியிடும்படிக்கு, நீங்கள் பாவநிவாரணபலியாகப் பழுதற்ற ஒரு வெள்ளாட்டுக்கடாவையும், சர்வாங்க தகனபலியாக ஒருவயதான பழுதற்ற ஒரு கன்றுக்குட்டியையும், ஒரு ஆட்டுக்குட்டியையும்,
சமாதானபலிகளாக ஒரு காளையையும், ஒரு ஆட்டுக்கடாவையும், எண்ணெயிலே பிசைந்த போஜனபலியையும் கொண்டுவாருங்கள்; இன்று கர்த்தர் உங்களுக்குத் தரிசனமாவார் என்று சொல் என்றான்.
அப்பொழுது மோசே: கர்த்தர் கட்டளையிட்ட இந்தக் காரியத்தைச் செய்யுங்கள்; கர்த்தருடைய மகிமை உங்களுக்குக் காணப்படும் என்றான்.
மோசே ஆரோனை நோக்கி: நீ பலிபீடத்தண்டையில் சேர்ந்து, கர்த்தர் கட்டளையிட்டபடியே, உன் பாவநிவாரணபலியையும் உன் சர்வாங்க தகனபலியையும் செலுத்தி, உனக்காகவும் ஜனங்களுக்காகவும் பாவநிவிர்த்தி செய்து, ஜனங்களுடைய பலியையும் செலுத்தி, அவர்களுக்காகவும் பாவநிவிர்த்தி செய் என்றான்.
அப்பொழுது ஆரோன் பலிபீடத்தண்டையில் சேர்ந்து, தன் பாவநிவாரணபலியாகிய கன்றுக்குட்டியைக் கொன்றான்.
ஆரோனின் குமாரர் அதின் இரத்தத்தை அவனிடத்தில் கொண்டுவந்தார்கள்; அவன் தன் விரலை அந்த இரத்தத்தில் தோய்த்து, பலிபீடத்தின் கொம்புகளின் மேல் பூசி, மற்ற இரத்தத்தைப் பலிபீடத்தின் அடியிலே ஊற்றி,
பின்பு சர்வாங்கதகனபலியையும் கொன்றான்; ஆரோனின் குமாரர் அதின் இரத்தத்தை அவனிடத்தில் கொண்டுவந்தார்கள்; அதை அவன் பலிபீடத்தின்மேல் சுற்றிலும் தெளித்தான்.
சர்வாங்கதகனபலியின் துண்டங்களையும் தலையையும் அவனிடத்தில் கொண்டுவந்தார்கள்; அவன் அவைகளைப் பலிபீடத்தின்மேல் தகனித்து,
குடல்களையும் தொடைகளையும் கழுவி, பலிபீடத்தின்மேல் இருந்த சர்வாங்க தகனபலியின்மேல் தகனித்தான்.
பின்பு அவன் ஜனங்களின் பலியைக்கொண்டுவந்து, ஜனங்களின் பாவநிவிர்த்திக்குரிய வெள்ளாட்டுக்கடாவைக்கொன்று, முந்தினதைப் பலியிட்டது போல, அதைப் பாவநிவாரணபலியாக்கி,
சர்வாங்கதகனபலியையும் கொண்டுவந்து, நியமத்தின்படி அதைப் பலியிட்டு,
போஜனபலியையும் கொண்டுவந்து, அதில் கைநிறைய எடுத்து, அதைக் காலையில் செலுத்தும் சர்வாங்கதகனபலியுடனே பலிபீடத்தின்மேல் தகனித்தான்.
பின்பு ஜனங்களின் சமாதானபலிகளாகிய காளையையும் ஆட்டுக்கடாவையும் கொன்றான்; ஆரோனின் குமாரர் அதின் இரத்தத்தை அவனிடத்தில் கொண்டுவந்தார்கள்; அவன் அதைப் பலிபீடத்தின்மேல் சுற்றிலும் தெளித்து,
காளையிலும் ஆட்டுக்கடாவிலும் எடுத்த கொழுப்பையும், வாலையும், குடல்களை மூடிய ஜவ்வையும், குண்டிக்காய்களையும், கல்லீரலின்மேல் இருந்த ஜவ்வையும் கொண்டுவந்து,
கொழுப்பை மார்க்கண்டங்களின்மேல் வைத்தார்கள்; அந்தக் கொழுப்பைப் பலிபீடத்தின்மேல் தகனித்தான்.
பின்பு ஆரோன் ஜனங்களுக்கு நேராகத் தன் கைகளை உயர்த்தி, அவர்களை ஆசீர்வதித்து, தான் பாவநிவாரணபலியையும், சர்வாங்கதகனபலியையும், சமாதானபலிகளையும் செலுத்தின இடத்திலிருந்து இறங்கினான்.
பின்பு மோசேயும் ஆரோனும் ஆசரிப்புக்கூடாரத்துக்குள் பிரவேசித்து, வெளியே வந்து, ஜனங்களை ஆசீர்வதித்தார்கள்; அப்பொழுது கர்த்தருடைய மகிமை சகல ஜனங்களுக்கும் காணப்பட்டது.
அன்றியும் கர்த்தருடைய சந்நிதியிலிருந்து அக்கினி புறப்பட்டு, பலிபீடத்தின்மேல் இருந்த சர்வாங்க தகனபலியையும் கொழுப்பையும் எரித்துவிட்டது; ஜனங்களெல்லாரும் அதைக் கண்டபோது ஆரவாரித்து முகங்குப்புற விழுந்தார்கள்.