Come now, and let us reason together, saith the LORD: though your sins be as scarlet, they shall be as white as snow; though they be red like crimson, they shall be as wool.
கர்த்தருக்குச் செலுத்துகிற சமாதானபலிகளின் பிரமாணம் என்னவென்றால்,
அதை ஸ்தோத்திரத்துக்காகச் செலுத்துவானானால், அவன் ஸ்தோத்திர பலியோடுகூட எண்ணெயிலே பிசைந்த புளிப்பில்லா அதிரசங்களையும், எண்ணெய் பூசப்பட்ட புளிப்பில்லா அடைகளையும், எண்ணெயிலே பிசைந்து வறுக்கப்பட்ட மெல்லிய மாவினால் செய்த அதிரசங்களையும் படைக்கக்கடவன்.
அவைகளைப் படைக்கிறதும் அல்லாமல், புளித்தமாவினால் செய்த அப்பத்தையும், தன்னுடைய சமாதானபலியாகிய ஸ்தோத்திரபலியோடுகூட படைக்கவேண்டும்.
அந்தப் படைப்பு முழுவதிலும் வகைக்கு ஒவ்வொன்றை எடுத்துக் கர்த்தருக்கு ஏறெடுத்துப் படைக்கும் பலியாகச் செலுத்துவானாக; அது சமாதானபலியின் இரத்தத்தைத் தெளித்த ஆசாரியனுடையதாகும்.
சமாதானபலியாகிய ஸ்தோத்திரபலியின் மாம்சமானது செலுத்தப்பட்ட அன்றைத்தினமே புசிக்கப்படவேண்டும்; அதில் ஒன்றும் விடியற்காலமட்டும் வைக்கப்படலாகாது.
அவன் செலுத்தும் பலி பொருத்தனையாயாவது உற்சாகபலியாயாவது இருக்குமானால், அது செலுத்தப்படும் நாளிலும், அதில் மீதியானது மறுநாளிலும் புசிக்கப்படலாம்.
பலியின் மாம்சத்தில் மீதியாயிருக்கிறது மூன்றாம் நாளில் அக்கினியிலே சுட்டெரிக்கப்படக்கடவது.
சமாதானபலியின் மாம்சத்தில் மீதியானது மூன்றாம் நாளில் புசிக்கப்படுமானால், அது அங்கிகரிக்கப்படாது; அதைச் செலுத்தினவனுக்கு அது பலிக்காது; அது அருவருப்பாயிருக்கும்; அதைப் புசிக்கிறவன் தன் அக்கிரமத்தைச் சுமப்பான்.
தீட்டான எந்த வஸ்துவிலாவது அந்த மாம்சம் பட்டதானால் அது புசிக்கப்படாமல் அக்கினியிலே சுட்டெரிக்கப்படக்கடவது; மற்ற மாம்சத்தையோ சுத்தமாயிருக்கிறவனெவனும் புசிக்கலாம்.
ஒருவன் தீட்டுள்ளவனாயிருக்கையில் கர்த்தருடைய சமாதானபலியின் மாம்சத்தைப் புசித்தால், அவன் தன் ஜனத்தாரில் இராதபடிக்கு அறுப்புண்டுபோவான்.
மனுஷருடைய தீட்டையாவது, தீட்டான மிருகத்தையாவது, அருவருக்கப்படத்தக்க தீட்டான மற்ற எந்த வஸ்துவையாவது ஒருவன் தொட்டிருந்து, கர்த்தருடைய சமாதானபலியின் மாம்சத்திலே புசித்தால், அவன் தன் ஜனங்களில் இராதபடிக்கு அறுப்புண்டுபோவான் என்றார்.
பின்னும் கர்த்தர் மோசேயை நோக்கி:
நீ இஸ்ரவேல் புத்திரரோடே சொல்லவேண்டியது என்னவென்றால், மாடு, ஆடு, வெள்ளாடு என்பவைகளின் கொழுப்பை நீங்கள் புசிக்கலாகாது.
தானாய்ச் செத்த மிருகத்தின் கொழுப்பையும், பீறுண்ட மிருகத்தின் கொழுப்பையும் பலவித வேலைகளுக்கு வழங்கலாம்; ஆனாலும் நீங்கள் அதை ஒருபோதும் புசிக்கலாகாது.
கர்த்தருக்குத் தகனபலியாகச் செலுத்தப்படும் மிருகத்தின் கொழுப்பைப் புசிக்கிற எந்த ஆத்துமாவும் தன் ஜனங்களில் இராதபடிக்கு அறுப்புண்டுபோவான்.
உங்கள் வாசஸ்தலங்களில் எங்கும் யாதொரு பறவையின் இரத்தத்தையாவது, யாதொரு மிருகத்தின் இரத்தத்தையாவது புசிக்கலாகாது.
எவ்வித இரத்தத்தையாகிலும் புசிக்கிற எவனும் தன் ஜனங்களில் இராதபடிக்கு அறுப்புண்டுபோவான் என்று சொல் என்றார்.
பின்னும் கர்த்தர் மோசேயை நோக்கி:
நீ இஸ்ரவேல் புத்திரரோடே சொல்லவேண்டியது என்னவென்றால், கர்த்தருக்குச் சமாதானபலி செலுத்துகிறவன் தான் செலுத்தும் சமாதானபலியைக் கர்த்தருடைய சந்நிதியில் கொண்டுவருவானாக.
கர்த்தருக்குத் தகனபலியாகப் படைப்பவைகளை அவன் கைகளே கொண்டுவரவேண்டும்; மார்க்கண்டத்தையும் அதனோடுகூட அதின்மேல் வைத்த கொழுப்பையும் கர்த்தருடைய சந்நிதியில் அசைவாட்டும் பலியாக அசைவாட்டும்படிக்குக் கொண்டுவரக்கடவன்.
அப்பொழுது ஆசாரியன் அந்தக் கொழுப்பைப் பலிபீடத்தின்மேல் தகனிக்கவேண்டும்; மார்க்கண்டமோ ஆரோனையும் அவன் குமாரரையும் சேரும்.
உங்கள் சமாதானபலிகளில் வலது முன்னந்தொடையை ஏறெடுத்துப்படைக்கும் பலியாகப் படைக்கும்படி ஆசாரியனிடத்தில் கொடுப்பீர்களாக.
ஆரோனுடைய குமாரரில், சமாதானபலியின் இரத்தத்தையும் கொழுப்பையும் செலுத்துகிறவனுக்கு, வலது முன்னந்தொடை பங்காகச் சேரும்.
இஸ்ரவேல் புத்திரரின் சமாதானபலிகளில் அசைவாட்டும் மார்க்கண்டத்தையும் ஏறெடுத்துப்படைக்கும் முன்னந்தொடையையும் நான் அவர்கள் கையில் வாங்கி, அவைகளை ஆசாரியனாகிய ஆரோனுக்கும் அவன் குமாரருக்கும் இஸ்ரவேல் புத்திரருக்குள் நடக்கும் நித்திய கட்டளையாகக் கொடுத்தேன் என்று சொல் என்றார்.
கர்த்தருக்கு ஆசாரிய ஊழியம் செய்யும்படி ஆரோனும் அவன் குமாரரும் நியமிக்கப்பட்ட நாளிலே, இது அபிஷேகம் பண்ணப்பட்ட அவர்களுக்குக் கர்த்தருடைய தகனபலிகளில் கிடைக்கும்படி உண்டான கட்டளை.
இப்படி அவர்களுக்கு இஸ்ரவேல் புத்திரர் தங்கள் தலைமுறைதோறும் நித்திய நியமமாகக் கொடுக்கும்படி கர்த்தர் அவர்களை அபிஷேகம்பண்ணின நாளிலே கட்டளையிட்டார்.
சர்வாங்கதகனபலிக்கும் போஜனபலிக்கும் பாவநிவாரணபலிக்கும் குற்றநிவாரணபலிக்கும் பிரதிஷ்டைபலிகளுக்கும் சமாதானபலிகளுக்கும் அடுத்த பிரமாணம் இதுவே.
கர்த்தருக்குத் தங்கள் பலிகளைச் செலுத்தவேண்டும் என்று அவர் இஸ்ரவேல் புத்திரருக்குச் சீனாய் வனாந்தரத்திலே கற்பிக்கும்போது இவைகளை மோசேக்குச் சீனாய்மலையில் கட்டளையிட்டார்.