But they that wait upon the LORD shall renew their strength; they shall mount up with wings as eagles; they shall run, and not be weary; and they shall walk, and not faint.
ஒருவன் கர்த்தருக்கு விரோதமாக அநியாயம் செய்து, தன் வசத்தில் ஒப்புவிக்கப்பட்ட பொருளிலாவது, கொடுக்கல் வாங்கலிலாவது, தன் அயலானுக்கு மாறாட்டம்பண்ணி, அல்லது ஒரு வஸ்துவைப் பலாத்காரமாய்ப் பறித்துக்கொண்டு, அல்லது தன் அயலானுக்கு இடுக்கண்செய்து,
அல்லது காணாமற்போனதைக் கண்டடைந்தும் அதை மறுதலித்து, அதைக்குறித்துப் பொய்யாணையிட்டு, மனிதர் செய்யும் இவைமுதலான யாதொரு காரியத்தில் பாவஞ்செய்தானேயாகில்,
அவன் செய்த பாவத்தினாலே குற்றவாளியானபடியால், தான் பலாத்காரமாய்ப் பறித்துக்கொண்டதையும், இடுக்கண்செய்து பெற்றுக்கொண்டதையும், தன் வசத்திலே ஒப்புவிக்கப்பட்டதையும், காணாமற்போயிருந்து தான் கண்டெடுத்ததையும்,
பொய்யாணையிட்டுச் சம்பாதித்த பொருளையும் திரும்பக் கொடுக்கக்கடவன்; அந்த முதலைக் கொடுக்கிறதும் அல்லாமல், அதினோடு ஐந்தில் ஒரு பங்கு அதிகமாகவுங் கூட்டி, அதைத் தான் குற்றநிவாரணபலியை இடும் நாளில், அதற்குரியவனுக்குக் கொடுத்துவிட்டு,
தன் குற்றநிவாரணபலியாக, உன் மதிப்புக்குச் சரியான பழுதற்ற ஆட்டுக்கடாவைக் கர்த்தருக்குச் செலுத்தும்படி, அதை ஆசாரியனிடத்தில் குற்றநிவாரணபலியாகக் கொண்டுவருவானாக.
கர்த்தருடைய சந்நிதியில் அவன் பாவத்தை ஆசாரியன் நிவிர்த்திசெய்யக்கடவன்; அப்பொழுது அவன் குற்றவாளியாகச் செய்த அப்படிப்பட்ட எந்தக்காரியமும் அவனுக்கு மன்னிக்கப்படும் என்றார்.
பின்னும் கர்த்தர் மோசேயை நோக்கி:
நீ ஆரோனுக்கும் அவன் குமாரருக்கும் கற்பிக்கவேண்டிய சர்வாங்க தகனபலிக்குரிய பிரமாணம் என்னவென்றால், சர்வாங்க தகனபலியானது இராமுழுவதும் விடியற்காலமட்டும் பலிபீடத்தின்மேல் எரியவேண்டும்; பலிபீடத்தின் மேலுள்ள அக்கினி எரிந்துகொண்டே இருக்கவேண்டும்.
ஆசாரியன் தன் சணல்நூல் அங்கியைத் தரித்து, தன் சணல்நூல் ஜல்லடத்தை அரையில் போட்டுக்கொண்டு, பலிபீடத்தின்மேல் அக்கினியில் எரிந்த சர்வாங்க தகனபலியின் சாம்பலை எடுத்து, பலிபீடத்துப் பக்கத்தில் கொட்டி,
பின்பு தன் வஸ்திரங்களைக் கழற்றி, வேறு வஸ்திரங்களை உடுத்திக்கொண்டு, அந்தச் சாம்பலைப் பாளயத்துக்குப் புறம்பே சுத்தமான ஒரு இடத்திலே கொண்டுபோய்க் கொட்டக்கடவன்.
பலிபீடத்தின்மேல் அக்கினி எப்பொழுதும் எரிந்துகொண்டிருக்கவேண்டும்; அது ஒருபொழுதும் அவிந்துபோகலாகாது.
போஜனபலியின் பிரமாணம் என்னவென்றால், ஆரோனின் குமாரர் அதைக் கர்த்தருடைய சந்நிதியில் பலிபீடத்துக்கு முன்னே படைக்கவேண்டும்.
அவன் போஜனபலியின் மெல்லிய மாவிலும் அதின் எண்ணெயிலும் தன் கைப்பிடி நிறைய எடுத்து, போஜனபலியின்மேலுள்ள தூபவர்க்கம் யாவற்றோடும் கூட அதை ஞாபகக்குறியாகப் பலிபீடத்தின்மேல் கர்த்தருக்குச் சுகந்த வாசனையாகத் தகனிக்கக்கடவன்.
அதில் மீதியானதை ஆரோனும் அவன் குமாரரும் புசிப்பார்களாக; அது புளிப்பில்லா அப்பத்துடன் பரிசுத்த ஸ்தலத்தில் புசிக்கப்படக்கடவது; ஆசரிப்புக் கூடாரத்தின் பிராகாரத்தில் அதைப் புசிக்கவேண்டும்.
அதைப் புளித்தமாவுள்ளதாகப் பாகம்பண்ணவேண்டாம்; அது எனக்கு இடப்படும் தகனங்களில் நான் அவர்களுக்குக் கொடுத்த அவர்களுடைய பங்கு; அது பாவநிவாரண பலியைப்போலும் குற்றநிவாரண பலியைப்போலும் மகா பரிசுத்தமானது.
ஆரோனின் பிள்ளைகளில் ஆண்மக்கள் யாவரும் அதைப் புசிப்பார்களாக; கர்த்தருக்கு இடப்படும் தகனபலிகளில் அது உங்கள் தலைமுறைதோறும் நித்திய கட்டளையாய் இருக்கக்கடவது; அவைகளைத் தொடுகிறவனெவனும் பரிசுத்தமாய் இருப்பான் என்று சொல் என்றார்.
பின்னும் கர்த்தர் மோசேயை நோக்கி:
ஆரோன் அபிஷேகம் பண்ணப்படும் நாளில், அவனும் அவன் குமாரரும் கர்த்தருக்குச் செலுத்தவேண்டிய படைப்பு என்னவென்றால், ஒரு எப்பா அளவான மெல்லிய மாவிலே பத்தில் ஒரு பங்கை, காலையில் பாதியும் மாலையில் பாதியும், நித்திய போஜனபலியாகச் செலுத்தக்கடவர்கள்.
அது சட்டியிலே எண்ணெய்விட்டுப் பாகம்பண்ணப்படக்கடவது; பாகம்பண்ணப்பட்டபின்பு அதைக் கொண்டுவந்து, போஜனபலியாகப் பாகம்பண்ணப்பட்ட துண்டுகளைக் கர்த்தருக்குச் சுகந்த வாசனையாகப் படைக்கக்கடவாய்.
அவன் குமாரரில் அவனுடைய ஸ்தலத்திலே அபிஷேகம்பண்ணப்படுகிற ஆசாரியனும் அப்படியே செய்யக்கடவன்; அது முழுவதும் தகனிக்கப்படவேண்டும்; அது கர்த்தர் நியமித்த நித்திய கட்டளை.
ஆசாரியனுக்காக இடப்படும் எந்தப் போஜனபலியும் புசிக்கப்படாமல், முழுவதும் தகனிக்கப்படவேண்டும் என்றார்.
பின்னும் கர்த்தர் மோசேயை நோக்கி:
நீ ஆரோனோடும் அவன் குமாரரோடும் சொல்லவேண்டியதாவது, பாவநிவாரணபலியின் பிரமாணம் என்னவென்றால், சர்வாங்கதகனபலி கொல்லப்படும் இடத்தில் பாவநிவாரணபலியும் கர்த்தருடைய சந்நிதியில் கொல்லப்படக்கடவது; அது மகா பரிசுத்தமானது.
பாவநிவிர்த்திசெய்ய அதைப் பலியிடுகிற ஆசாரியன் அதைப் புசிக்கக்கடவன்; ஆசரிப்புக் கூடாரத்தின் பிராகாரமாகிய பரிசுத்த ஸ்தலத்திலே அது புசிக்கப்படவேண்டும்.
அதின் மாம்சத்தில் படுகிறது எதுவும் பரிசுத்தமாயிருக்கும்; அதின் இரத்தத்திலே கொஞ்சம் ஒரு வஸ்திரத்தில் தெறித்ததானால், இரத்தந்தெறித்த வஸ்திரத்தைப் பரிசுத்த ஸ்தலத்தில் கழுவவேண்டும்.
அது சமைக்கப்பட்ட மண்பாண்டம் உடைக்கப்படவேண்டும்; செப்புப்பானையில் சமைக்கப்பட்டதானால், அது விளக்கப்பட்டுத் தண்ணீரில் கழுவப்படவேண்டும்.
ஆசாரியரில் ஆண்மக்கள் யாவரும் அதைப் புசிப்பார்களாக; அது மகா பரிசுத்தமானது.
எந்தப் பாவநிவாரணபலியின் இரத்தத்தில் கொஞ்சம் பரிசுத்த ஸ்தலத்தில் பாவநிவிர்த்தியின்பொருட்டு ஆசரிப்புக்கூடாரத்திற்குள்ளே கொண்டுவரப்பட்டதோ, அந்தப் பலி புசிக்கப்படலாகாது, அது அக்கினியிலே தகனிக்கப்படவேண்டும்.