Come now, and let us reason together, saith the LORD: though your sins be as scarlet, they shall be as white as snow; though they be red like crimson, they shall be as wool.
நீ இஸ்ரவேல் புத்திரரிடத்தில் சொல்லவேண்டியது என்னவென்றால், ஒருவன் கர்த்தருடைய கட்டளைகளில் யாதொன்றை அறியாமையினால் மீறி, செய்யத்தகாததைச் செய்து பாவத்துக்கு உட்பட்டால் அறியவேண்டியதாவது:
அபிஷேகம் பெற்ற ஆசாரியன், ஜனங்கள் குற்றத்திற்கு உட்படத்தக்கதாகப் பாவஞ்செய்தால், தான் செய்த பாவத்தினிமித்தம் பழுதற்ற ஒரு இளங்காளையை பாவநிவாரணபலியாகக் கர்த்தருடைய சந்நிதியில் கொண்டுவரக்கடவன்.
அவன் அந்தக் காளையை ஆசரிப்புக்கூடாரவாசலில் கர்த்தருடைய சந்நிதியில் கொண்டுவந்து, அதின் தலைமேல் தன் கையை வைத்து, கர்த்தருடைய சந்நிதியில் அதைக் கொல்லக்கடவன்.
அப்பொழுது, அபிஷேகம் பெற்ற ஆசாரியன் அந்தக் காளையின் இரத்தத்தில் கொஞ்சம் எடுத்து, அதை ஆசரிப்புக்கூடாரத்தில் கொண்டுவந்து,
தன் விரலை இரத்தத்தில் தோய்த்து, பரிசுத்த ஸ்தலத்தின் திரைக்கு எதிரே கர்த்தருடைய சந்நிதியில் ஏழுதரம் தெளிக்கக்கடவன்.
பின்பு, ஆசாரியன் அந்த இரத்தத்தில் கொஞ்சம் எடுத்து, ஆசரிப்புக் கூடாரத்திலே கர்த்தருடைய சந்நிதியில் இருக்கும் சுகந்த தூபபீடத்துக் கொம்புகளின்மேல் பூசி, காளையினுடைய மற்ற இரத்தம் முழுவதையும் ஆசரிப்புக் கூடாரவாசலுக்கு முன்பாக இருக்கிற தகனபலிபீடத்தின் அடியிலே ஊற்றிவிட்டு,
பாவநிவாரணபலியான காளையின் எல்லாக் கொழுப்புமாகிய குடல்களை மூடிய கொழுப்பையும், அவைகள்மேல் இருக்கிற கொழுப்பு முழுவதையும்,
இரண்டு குண்டிக்காய்களையும், அவைகள்மேல் சிறு குடல்களினிடத்தில் இருக்கிற கொழுப்பையும், குண்டிக்காய்களோடேகூடக் கல்லீரலின்மேல் இருக்கிற ஜவ்வையும்,
சமாதானபலியின் காளையிலிருந்து எடுக்கிறதுபோல அதிலிருந்து எடுத்து, அவைகளைத் தகனபலிபீடத்தின்மேல் தகனிக்கக்கடவன்.
காளையின் தோலையும், அதின் மாம்சம் முழுவதையும், அதின் தலையையும், தொடைகளையும், அதன் குடல்களையும், அதன் சாணியையும்,
காளை முழுவதையும் பாளயத்துக்குப் புறம்பே சாம்பல் கொட்டுகிற சுத்தமான இடத்திலே கொண்டுபோய், கட்டைகளின்மேல் போட்டு, அக்கினியாலே சுட்டெரிக்கக்கடவன்; சாம்பல் கொட்டியிருக்கிற இடத்திலே அதைச்சுட்டெரிக்கக்கடவன்.
இஸ்ரவேல் சபையார் எல்லாரும் அறியாமையினால் பாவஞ்செய்து, காரியம் தங்கள் கண்களுக்கு மறைவாயிருக்கிறதினால், கர்த்தருடைய கட்டளைகளில் யாதொன்றை மீறி, செய்யத்தகாததைச் செய்து, பாவத்துக்குட்பட்டுக் குற்றவாளிகளானால்,
அவர்கள் செய்த பாவம் தெரியவரும்போது, சபையார் அந்தப் பாவத்தினிமித்தம் ஒரு இளங்காளையை ஆசரிப்புக் கூடாரத்துக்கு முன்பாகப் பலியிடக் கொண்டுவரவேண்டும்.
சபையின் மூப்பர் கர்த்தருடைய சந்நிதியில் தங்கள் கைகளை அதின் தலைமேல் வைக்கக்கடவர்கள்; பின்பு கர்த்தருடைய சந்நிதியில் அந்தக் காளையைக் கொல்லவேண்டும்.
அப்பொழுது, அபிஷேகம் பெற்ற ஆசாரியன் அதின் இரத்தத்தில் கொஞ்சம் எடுத்து, ஆசரிப்புக்கூடாரத்தில் கொண்டுவந்து,
தன் விரலை இரத்தத்தில் தோய்த்து, கர்த்தருடைய சந்நிதியில் திரைக்கு எதிரே ஏழுதரம் தெளித்து,
ஆசரிப்புக் கூடாரத்தில் கர்த்தருடைய சந்நிதியில் இருக்கும் பலிபீடத்தின் கொம்புகளின்மேல் அந்த இரத்தத்தில் கொஞ்சம் பூசி, மற்ற இரத்தமெல்லாம் ஆசரிப்புக் கூடாரவாசலில் இருக்கிற தகனபலிபீடத்தின் அடியிலே ஊற்றிவிட்டு,
அதின் கொழுப்பு முழுவதையும் அதிலிருந்து எடுத்து, பலிபீடத்தின்மேல் தகனித்து,
பாவநிவாரணபலியின் காளையைச் செய்தபிரகாரம் இந்தக் காளையையும் செய்து, இவ்வண்ணமாய் ஆசாரியன் அவர்களுக்குப் பாவநிவிர்த்தி செய்யக்கடவன்; அப்பொழுது அது அவர்களுக்கு மன்னிக்கப்படும்.
பின்பு காளையைப் பாளயத்துக்குப் புறம்பே கொண்டுபோய், முந்தின காளையைச் சுட்டெரித்ததுபோலச் சுட்டெரிக்கக்கடவன்; இது சபைக்காகச் செய்யப்படும் பாவநிவாரணபலி.
ஒரு பிரபு தன் தேவனாகிய கர்த்தருடைய கட்டளைகளில் யாதொன்றை மீறி, அறியாமையினால் செய்யத்தகாததைச் செய்து, பாவத்துக்குட்பட்டுக் குற்றவாளியானால்,
தான் செய்தது பாவம் என்று தனக்குத் தெரியவரும்போது, அவன் வெள்ளாடுகளில் பழுதற்ற ஒரு இளங்கடாவைப் பலியாகக் கொண்டுவந்து,
அந்தக் கடாவின் தலைமேல் தன் கையை வைத்து, கர்த்தருடைய சந்நிதியில் சர்வாங்கதகனபலி கொல்லப்படும் இடத்தில் அதைக்கொல்லக்கடவன்; இது பாவநிவாரணபலி.
அப்பொழுது ஆசாரியன் அதின் இரத்தத்தில் கொஞ்சம் தன் விரலால் எடுத்து, தகனபலிபீடத்துக் கொம்புகளின்மேல் பூசி, மற்ற இரத்தத்தைத் தகனபலிபீடத்தின் அடியிலே ஊற்றிவிட்டு,
அதின் கொழுப்பு முழுவதையும், சமாதானபலியின் கொழுப்பைப்போல, பலிபீடத்தின்மேல் தகனித்து, இவ்வண்ணமாய் ஆசாரியன் அவன் செய்த பாவத்தைக்குறித்து அவனுக்காகப் பாவநிவிர்த்தி செய்யக்கடவன்; அப்பொழுது அது அவனுக்கு மன்னிக்கப்படும்.
சாதாரண ஜனங்களில் ஒருவன் அறியாமையினால் கர்த்தரின் கட்டளைகளில் யாதொன்றை மீறி, செய்யத்தகாததைச் செய்து, பாவத்துக்குட்பட்டுக் குற்றவாளியானால்,
தான் செய்தது பாவம் என்று தனக்குத் தெரியவரும்போது. அவன் தான் செய்த பாவத்தினிமித்தம் வெள்ளாடுகளில் பழுதற்ற ஒரு பெண்குட்டியைப் பலியாகக் கொண்டுவந்து,
பாவநிவாரணபலியின் தலைமேல் தன் கையை வைத்து, சர்வாங்கதகனபலியிடும் இடத்தில் அந்தப் பாவநிவாரணபலியைக் கொல்லக்கடவன்.
அப்பொழுது ஆசாரியன் அதின் இரத்தத்தில் கொஞ்சம் தன் விரலால் எடுத்து, தகனபலிபீடத்துக் கொம்புகளின்மேல் பூசி, மற்ற இரத்தமெல்லாம் பலிபீடத்தின் அடியிலே ஊற்றிவிட்டு,
சமாதானபலியிலிருந்து கொழுப்பை எடுப்பதுபோல, அதின் கொழுப்பு முழுவதையும் எடுத்து, ஆசாரியன் பலிபீடத்தின்மேல் கர்த்தருக்குச் சுகந்த வாசனையாகத் தகனித்து, இவ்வண்ணமாய் அவனுக்குப் பாவநிவிர்த்தி செய்யக்கடவன்; அப்பொழுது அது அவனுக்கு மன்னிக்கப்படும்.
அவன் பாவநிவாரணபலியாக ஒரு ஆட்டுகுட்டியைக் கொண்டுவருவானாகில், பழுதற்ற பெண்குட்டியைக் கொண்டுவந்து,
அந்தப் பாவநிவாரணபலியின் தலைமேல் தன் கையை வைத்து, சர்வாங்கதகனபலி கொல்லப்படும் இடத்தில் அதைப் பாவநிவாரணபலியாகக் கொல்லக்கடவன்.
அப்பொழுது ஆசாரியன் அந்தப்பாவநிவாரணபலியின் இரத்தத்தில் கொஞ்சம் தன் விரலால் எடுத்து, தகனபலிபீடத்துக் கொம்புகளின்மேல் பூசி, மற்ற இரத்தமெல்லாம் பலிபீடத்தின் அடியிலே ஊற்றிவிட்டு,
சமாதானபலியான ஆட்டுக்குட்டியின் கொழுப்பை எடுக்கிறதுபோல அதன் கொழுப்பு முழுவதையும் எடுத்து, கர்த்தருக்கு இடப்படும் தகனபலிகளைப்போல, பலிபீடத்தின்மேல் ஆசாரியன் தகனிக்கவேண்டும்; இவ்வண்ணமாய் அவன் செய்த பாவத்துக்கு ஆசாரியன் பாவநிவிர்த்தி செய்யக்கடவன்; அப்பொழுது அது அவனுக்கு மன்னிக்கப்படும்.