Then Peter said unto them, Repent, and be baptized every one of you in the name of Jesus Christ for the remission of sins, and ye shall receive the gift of the Holy Ghost.
நீ இஸ்ரவேல் புத்திரரோடே சொல்லவேண்டியது என்னவென்றால்: நான் உங்களுக்குக் கொடுக்கும் தேசத்திலே நீங்கள் போய்ச் சேர்ந்திருக்கும்போது, தேசம் கர்த்தருக்கென்று ஓய்வு கொண்டாடவேண்டும்.
ஆறுவருஷம் உன் வயலை விதைத்து, உன் திராட்சத்தோட்டத்தைக் கிளைகழித்து, அதின் பலனைச் சேர்ப்பாயாக.
ஏழாம் வருஷத்திலோ, கர்த்தருக்கென்று ஓய்ந்திருக்கும் ஓய்வு தேசத்திற்கு இருக்கவேண்டும்; அதில் உன் வயலை விதைக்காமலும், உன் திராட்சத்தோட்டத்தைக் கிளைகழிக்காமலும்,
தானாய் விளைந்து பயிரானதை அறுக்காமலும், கிளைகழிக்காதே விட்ட திராட்சச்செடியின் பழங்களைச் சேர்க்காமலும் இருப்பாயாக; தேசத்துக்கு அது ஓய்வு வருஷமாயிருக்கக்கடவது.
தேசத்தின் ஓய்விலே பயிராகிறது உங்களுக்கு ஆகாரமாயிருப்பதாக; உன் வேலைக்காரனுக்கும், உன் வேலைக்காரிக்கும், உன் கூலிக்காரனுக்கும், உன்னிடத்தில் தங்குகிற அந்நியனுக்கும்,
உன் நாட்டு மிருகத்துக்கும், உன் தேசத்தில் இருக்கிற காட்டு மிருகத்துக்கும் அதில் விளைந்திருப்பதெல்லாம் ஆகாரமாயிருப்பதாக.
அன்றியும், ஏழு ஓய்வு வருஷங்களுள்ள ஏழு ஏழு வருஷங்களை எண்ணுவாயாக; அந்த ஏழு ஓய்வு வருஷங்களும் நாற்பத்தொன்பது வருஷமாகும்.
அப்பொழுதும் ஏழாம் மாதம் பத்தாந்தேதியில் எக்காளச்சத்தம் தொனிக்கும்படி செய்யவேண்டும்; பாவநிவாரணநாளில் உங்கள் தேசமெங்கும் எக்காளச்சத்தம் தொனிக்கும்படி செய்யவேண்டும்.
ஐம்பதாம் வருஷத்தைப் பரிசுத்தமாக்கி, தேசமெங்கும் அதின் குடிகளுக்கெல்லாம் விடுதலை கூறக்கடவீர்கள்; அது உங்களுக்கு யூபிலி வருஷம்; அதிலே உங்களில் ஒவ்வொருவனும் தன்தன் காணியாட்சிக்கும் தன் தன் குடும்பத்துக்கும் திரும்பிப் போகக்கடவன்.
அது யூபிலி வருஷம்; அது உங்களுக்குப் பரிசுத்தமாயிருக்கவேண்டும்; அந்த வருஷத்தில் வயல்வெளியில் விளைந்தவைகளை நீங்கள் புசிக்கவேண்டும்.
அந்த யூபிலி வருஷத்தில் உங்களில் அவனவன் தன்தன் காணியாட்சிக்குத் திரும்பிப்போகக்கடவன்.
ஆகையால், பிறனுக்கு எதையாவது விற்றாலும், அவனிடத்தில் எதையாவது கொண்டாலும் ஒருவருக்கொருவர் அநியாயம் செய்யக்கூடாது.
யூபிலி வருஷத்துக்குப் பின்வரும் வருஷங்களின் தொகைக்கேற்கப் பிறனிடத்தில் கொள்ளுவாயாக; பலனுள்ள வருஷங்களின் தொகைக்கேற்க அவன் உனக்கு விற்பானாக.
பலனுள்ள வருஷங்களின் இலக்கத்தைப் பார்த்து அவன் உனக்கு விற்கிறபடியால், வருஷங்களின் தொகை ஏறினால் விலையேறவும், வருஷங்களின் தொகை குறைந்தால், விலை குறையவும் வேண்டும்.
உங்களில் ஒருவனும் பிறனுக்கு அநியாயம் செய்யக்கூடாது; உன் தேவனுக்குப் பயப்படவேண்டும்; நான் உங்கள் தேவனாகிய கர்த்தர்.
என் கட்டளைகளின்படி செய்து, என் நியாயங்களைக் கைக்கொண்டு அவைகளின்படி நடக்கக்கடவீர்கள்; அப்பொழுது தேசத்திலே சுகமாய்க் குடியிருப்பீர்கள்.
பூமி தன் கனியைத் தரும்; நீங்கள் திருப்தியாகச் சாப்பிட்டு, அதில் சுகமாய்க் குடியிருப்பீர்கள்.
ஏழாம் வருஷத்தில் எதைப் புசிப்போம்? நாங்கள் விதைக்காமலும், விளைந்ததைச் சேர்க்காமலும் இருக்கவேண்டுமே! என்று சொல்வீர்களானால்,
நான் ஆறாம் வருஷத்தில் உங்களுக்கு ஆசீர்வாதத்தை அநுக்கிரகம்பண்ணுவேன்; அது உங்களுக்கு மூன்று வருஷத்தின் பலனைத் தரும்.
நீங்கள் எட்டாம் வருஷத்திலே விதைத்து, ஒன்பதாம் வருஷம்மட்டும் பழைய பலனிலே சாப்பிடுவீர்கள்; அதின் பலன் விளையும்வரைக்கும் பழைய பலனைச் சாப்பிடுவீர்கள்.
தேசம் என்னுடையதாயிருக்கிறபடியால், நீங்கள் நிலங்களை அறுதியாய் விற்கவேண்டாம்; நீங்கள் பரதேசிகளும் என்னிடத்தில் புறக்குடிகளுமாயிருக்கிறீர்கள்.
உங்கள் காணியாட்சியான தேசமெங்கும் நிலங்களை மீட்டுக்கொள்ள இடங்கொடுக்கக்கடவீர்கள்.
உங்கள் சகோதரன் தரித்திரப்பட்டு, தன் காணியாட்சியிலே சிலதை விற்றால், அவன் இனத்தான் ஒருவன் வந்து, தன் சகோதரன் விற்றதை மீட்கக்கடவன்.
அதை மீட்க ஒருவனும் இல்லாமல், தானே அதை மீட்கத்தக்கவனானால்,
அதை விற்றபின் சென்ற வருஷங்களின் தொகையைத் தள்ளி, மீந்த தொகையை ஏற்றி, கொண்டவனுக்குக் கொடுத்து, அவன் தன் காணியாட்சிக்குத் திரும்பிப்போகக்கடவன்.
அப்படிக் கொடுப்பதற்கான நிர்வாகம் அவனுக்கு இல்லாவிட்டால், அவன் விற்றது வாங்கினவன் கையிலே யூபிலி வருஷம்மட்டும் இருந்து, யூபிலி வருஷத்திலே அது விடுதலையாகும்; அப்பொழுது அவன் தன் காணியாட்சிக்குத் திரும்பப்போவான்.
ஒருவன் மதில்சூழ்ந்த பட்டணத்திலுள்ள தன் வாசஸ்தலமாகிய வீட்டை விற்றால், அதை விற்ற ஒரு வருஷத்துக்குள் அதை மீட்டுக்கொள்ளலாம்; ஒரு வருஷத்துக்குள்ளாகவே அதை மீட்டுக்கொள்ளவேண்டும்.
ஒரு வருஷத்துக்குள்ளே அதை மீட்டுக்கொள்ளாதிருந்தால், மதில்சூழ்ந்த பட்டணத்திலுள்ள அந்த வீடு தலைமுறைதோறும் அதை வாங்கினவனுக்கே உரியதாகும்; யூபிலி வருஷத்திலும் அது விடுதலையாகாது.
மதில்சூழப்படாத கிராமங்களிலுள்ள வீடுகளோ, தேசத்தின் நிலங்கள்போலவே எண்ணப்படும்; அவைகள் மீட்கப்படலாம்; யூபிலி வருஷத்தில் அவைகள் விடுதலையாகும்.
இஸ்ரவேல் புத்திரருக்குள்ளே லேவியருடைய பட்டணங்களிலுள்ள வீடுகள் அவர்களுக்குரிய காணியாட்சியானபடியால், லேவியரிடத்தில் அவனுடைய காணியாட்சிப் பட்டணத்திலுள்ள வீட்டை ஒருவன் வாங்கினால், விற்கப்பட்ட அந்த வீடு யூபிலி வருஷத்தில் விடுதலையாகும்.
அவர்கள் பட்டணங்களைச் சூழ்ந்த வெளிநிலம் விற்கப்படலாகாது; அது அவர்களுக்கு நித்திய காணியாட்சியாயிருக்கும்.
உன் சகோதரன் தரித்திரப்பட்டு, கையிளைத்துப்போனவனானால் அவனை ஆதரிக்கவேண்டும்; பரதேசியைப்போலும் தங்கவந்தவனைப்போலும் அவன் உன்னோடே பிழைப்பானாக.
நீ அவன் கையில் வட்டியாவது பொலிசையாவது வாங்காமல், உன் தேவனுக்குப் பயந்து, உன் சகோதரன் உன்னோடே பிழைக்கும்படி செய்வாயாக.
அவனுக்கு உன் பணத்தை வட்டிக்கும், உன் தானியத்தைப் பொலிசைக்கும் கொடாயாக.
உன் சகோதரன் தரித்திரனாகி, உனக்கு விலைப்பட்டுப்போனால், அவனை அடிமையைப்போல ஊழியஞ்செய்ய நெருக்கவேண்டாம்.
அவன் கூலிக்காரனைப்போலவும் தங்கவந்தவனைப்போலவும் உன்னோடே இருந்து, யூபிலி வருஷம்மட்டும் உன்னிடத்தில் சேவிக்கக்கடவன்.
பின்பு, தன் பிள்ளைகளோடுங்கூட உன்னை விட்டு நீங்கலாகி, தன் குடும்பத்தாரிடத்துக்கும் தன் பிதாக்களின் காணியாட்சிக்கும் திரும்பிப்போகக்கடவன்.
அவர்கள் நான் எகிப்துதேசத்திலிருந்து புறப்படப்பண்ணின என்னுடைய ஊழியக்காரர்; ஆகையால், அவர்கள் அடிமைகளாக விற்கப்படலாகாது.
நீ அவனைக் கொடூரமாய் ஆளாமல், உன் தேவனுக்குப் பயந்திரு.
உனக்கு இருக்கும் ஆண் அடிமையும் பெண் அடிமையும் சுற்றிலும் இருக்கிற புறஜாதிகளாயிருக்கவேண்டும்; அவர்களில் நீ ஆண் அடிமையையும் பெண் அடிமையையும் விலைக்கு வாங்கலாம்.
உங்களிடத்திலே பரதேசிகளாய்த் தங்குகிற அந்நிய புத்திரரிலும், உங்கள் தேசத்தில் உங்களிடத்திலே பிறந்திருக்கிற அவர்களுடைய குடும்பத்தாரிலும் நீங்கள் உங்களுக்கு அடிமைகளைக்கொண்டு, அவர்களை உங்களுக்குச் சுதந்தரமாக்கலாம்.
அவர்களை உங்களுக்குப் பின்வரும் உங்கள் சந்ததியாரும் சுதந்தரிக்கும்படி நீங்கள் அவர்களைச் சுதந்தரமாக்கிக்கொள்ளலாம்; என்றைக்கும் அவர்கள் உங்களுக்கு அடிமைகளாயிருக்கலாம்; உங்கள் சகோதரராகிய இஸ்ரவேல் புத்திரரோ ஒருவரையொருவர் கொடூரமாக ஆளக்கூடாது.
உன்னிடத்தில் இருக்கிற பரதேசியும் அந்நியனும் செல்வனாயிருக்க, அவனிடத்தில் இருக்கிற உன் சகோதரன் தரித்திரப்பட்டு, அந்தப் பரதேசிக்காவது, அந்நியனுக்காவது, பரதேசியின் குடும்பத்தாரில் எவனுக்காவது அவன் விலைப்பட்டுப்போனால்,
அவன் விலைப்பட்டுப்போனபின் திரும்ப மீட்கப்படலாம்; அவன் சகோதரரில் ஒருவன் அவனை மீட்கலாம்.
அவனுடைய பிதாவின் சகோதரனாவது, அந்தச் சகோதரனுடைய புத்திரனாவது, அவன் குடும்பத்திலுள்ள அவனைச் சேர்ந்த இனத்தாரில் எவனாவது அவனை மீட்கலாம்; தன்னால் கூடுமானால், தன்னைத்தானே மீட்டுக்கொள்ளலாம்.
அவன் தான் விலைப்பட்ட வருஷந்தொடங்கி, யூபிலி வருஷம்வரைக்கும் உண்டான காலத்தைத் தன்னை விலைக்குக் கொண்டவனுடன் கணக்குப் பார்க்கக்கடவன்; அவனுடைய விலைக்கிரயம் கூலிக்காரனுடைய காலக்கணக்குப்போல, வருஷத்தொகைக்கு ஒத்துப்பார்க்கவேண்டும்.
இன்னும் அநேக வருஷங்கள் இருந்தால், அவன் தன் விலைக்கிரயத்திலே அவைகளுக்குத் தக்கதைத் தன்னை மீட்கும்பொருளாகத் திரும்பக்கொடுக்கக்கடவன்.
யூபிலி வருஷம்மட்டும் மீதியாயிருக்கிற வருஷங்கள் கொஞ்சமேயானால், அவனோடே கணக்குப் பார்த்து, தன் வருஷங்களுக்குத்தக்கதை, தன்னை மீட்கும் பொருளாகத் திரும்பக் கொடுக்கவேண்டும்.
இவன் வருஷத்திற்கு வருஷம் கூலிபொருந்திக்கொண்ட கூலிக்காரனைப் போல, அவனிடத்தில் இருக்கவேண்டும்; அவன் இவனை உனக்கு முன்பாகக் கொடூரமாய் ஆளக்கூடாது.
இப்படி இவன் மீட்டுக்கொள்ளப்படாதிருந்தால், இவனும் இவனோடுகூட இவன் பிள்ளைகளும் யூபிலி வருஷத்தில் விடுதலையாவார்கள்.
இஸ்ரவேல் புத்திரர் என் ஊழியக்காரர்; அவர்கள் நான் எகிப்துதேசத்திலிருந்து புறப்படப்பண்ணின என் ஊழியக்காரரே; நான் உங்கள் தேவனாகிய கர்த்தர்.