Come now, and let us reason together, saith the LORD: though your sins be as scarlet, they shall be as white as snow; though they be red like crimson, they shall be as wool.
சீயோனிலே எக்காளம் ஊதுங்கள், என் பரிசுத்த பர்வதத்திலே எச்சரிப்பின் சத்தமிடுங்கள்; தேசத்தின் குடிகள் எல்லாம் தத்தளிக்கக்கடவர்கள்; ஏனெனில் கர்த்தருடைய நாள் வருகிறது, அது சமீபமாயிருக்கிறது.
அது இருளும் அந்தகாரமுமான நாள்; அது மப்பும் மந்தாரமுமான நாள்; விடியற்கால வெளுப்பு பர்வதங்களின்மேல் பரவுகிறதுபோல ஏராளமான பலத்த ஒரு ஜாதி தீவிரமாக வந்து பரவும்; அப்படிப்பட்டது முன் ஒரு காலத்திலும் உண்டானதுமில்லை, இனித் தலைமுறை தலைமுறையாக வரும் வருஷங்களிலும் உண்டாவதுமில்லை.
அவைகளின் சாயல் குதிரைகளின் சாயலை ஒத்தது; அவைகள் குதிரை வீரரைப்போல ஓடும்.
அவைகள் ஓடுகிற இரதங்களின் இரைச்சல்போலவும், செத்தைகளை எரிக்கிற அக்கினி ஜூவாலையின் இரைச்சல்போலவும், யுத்தத்துக்கு ஆயத்தப்பட்ட பலத்த ஜனத்தின் இரைசல்போலவும், பர்வதங்களுடைய சிகரங்களின்மேல் குதிக்கும்.
அவைகளுக்கு முன்பாக ஜனங்கள் நடுங்குவார்கள்; எல்லா முகங்களும் கருகிப்போகும்.
அவைகள் பராக்கிரமசாலிகளைப்போல ஓடும்; யுத்தவீரரைப்போல மதிலேறும்; வரிசைகள் பிசகாமல், ஒவ்வொன்றும் தன் தன் அணியிலே செல்லும்.
ஒன்றை ஒன்று நெருக்காது; ஒவ்வொன்றும் தன் தன் பாதையிலே செல்லும்; அவைகள் ஆயுதங்களுக்குள் விழுந்தாலும் காயம்படாமற்போகும்.
அவைகள் பட்டணம் எங்கும் செல்லும்; மதிலின்மேல் ஓடும்; வீடுகளின்மேல் ஏறும்; பலகணி வழியாய்த் திருடனைப்போல உள்ளே நுழையும்.
அவைகளுக்கு முன்பாகப் பூமி அதிரும்; வானங்கள் அசையும்; சூரியனும் சந்திரனும் இருண்டுபோகும்; நட்சத்திரங்கள் ஒளி மழுங்கும்.
கர்த்தர் தமது சேனைக்குமுன் சத்தமிடுவார்; அவருடைய பாளயம் மகா பெரிது, அவருடைய வார்த்தையின்படி செய்கிறதற்கு வல்லமையுள்ளது; கர்த்தருடைய நாள் பெரிதும் மகா பயங்கரமுமாயிருக்கும்; அதைச் சகிக்கிறவன் யார்?
ஆதலால் நீங்கள் இப்பொழுதே உபவாசத்தோடும் அழுகையோடும் புலம்பலோடும் உங்கள் முழு இருதயத்தோடும் என்னிடத்தில் திரும்புங்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
நீங்கள் உங்கள் வஸ்திரங்களையல்ல, உங்கள் இருதயங்களைக்கிழித்து, உங்கள் தேவனாகிய கர்த்தர் இடத்தில் திரும்புங்கள்; அவர் இரக்கமும், மன உருக்கமும், நீடிய சாந்தமும், மிகுந்த கிருபையுமுள்ளவர்; அவர் தீங்குக்கு மனஸ்தாபப்படுகிறவருமாயிருக்கிறார்.
ஒருவேளை அவர் திரும்பி மனஸ்தாபப்பட்டு, உங்கள் தேவனாகிய கர்த்தருக்குப் போஜனபலிகளையும் பானபலிகளையும் செலுத்துகிறதற்கான ஆசீர்வாதத்தைத் தந்தருளுவார்.
ஜனத்தைக் கூட்டுங்கள். சபையைப் பரிசுத்தப்படுத்துங்கள்; முதியோரைச் சேருங்கள்; பிள்ளைகளையும் பாலுண்கிற குழந்தைகளையும் கூட்டுங்கள்; மணவாளன் தன் அறையையும், மணவாட்டி தன் மறைவையும் விட்டுப்புறப்படுவார்களாக.
கர்த்தரின் பணிவிடைக்காரராகிய ஆசாரியர்கள் மண்டபத்துக்கும் பலிபீடத்துக்கும் நடுவே அழுது: கர்த்தாவே, நீர் உமது ஜனத்தைத் தப்பவிட்டுப் புறஜாதிகள் அவர்களைப் பழிக்கும் நிந்தைக்கு உமது சுதந்தரத்தை ஒப்புக்கொடாதிரும்; உங்கள் தேவன் எங்கே என்று புறஜாதிகளுக்குள்ளே சொல்லப்படுவானேன் என்பார்களாக.
அப்பொழுது கர்த்தர் தமது தேசத்துக்காக வைராக்கியங்கொண்டு, தமது ஜனத்தைக் கடாட்சிப்பார்.
கர்த்தர் மறுமொழி கொடுத்து, தமது ஜனத்தை நோக்கி: இதோ, நான் உங்களை இனிப் புறஜாதிகளுக்குள்ளே நிந்தையாக வைக்காமல் உங்களுக்குத் தானியத்தையும் திராட்சரசத்தையும் எண்ணெயையும் கொடுத்தேன், நீங்கள் அதினால் திருப்தியாவீர்கள்.
வடதிசைச்சேனையை உங்களுக்குத் தூரமாக விலக்கி, அதின் முன்தண்டு கீழ்க்கடலுக்கும், அதின் பின்தண்டு மேற்கடலுக்கும், நேராக அதை வறட்சியும் பாழுமான தேசத்துக்குத் துரத்திவிடுவேன்; அங்கே அதின் நாற்றம் எழும்பி, அதின் துர்க்கந்தம் வீசும்; அது பெரிய காரியங்களைச் செய்தது.
தேசமே, பயப்படாதே, மகிழ்ந்து களிகூரு; கர்த்தர் பெரிய காரியங்களைச் செய்வார்.
நான் உங்களிடத்தில் அனுப்பின என் பெரிய சேனையாகிய வெட்டுக்கிளிகளும், பச்சைக்கிளிகளும், முசுக்கட்டைப் பூச்சிகளும், பச்சைப் புழுக்களும் பட்சித்த வருஷங்களின் விளைவை உங்களுக்குத் திரும்ப அளிப்பேன்.
நீங்கள் சம்பூரணமாகச் சாப்பிட்டு, திருப்தியடைந்து, உங்களை அதிசயமாய் நடத்திவந்த உங்கள் தேவனாகிய கர்த்தருடைய நாமத்தைத் துதிப்பீர்கள்; என் ஜனங்கள் ஒருபோதும் வெட்கப்பட்டுப்போவதில்லை.
நான் இஸ்ரவேலின் நடுவில் இருக்கிறவரென்றும், நானே உங்கள் தேவனாகிய கர்த்தர், வேறொருவர் இல்லையென்றும் அறிந்துகொள்வீர்கள்; என் ஜனங்கள் ஒருபோதும் வெட்கப்பட்டுப்போவதில்லை.
அதற்குப் பின்பு நான் மாம்சமான யாவர்மேலும் என் ஆவியை ஊற்றுவேன்; அப்பொழுது உங்கள் குமாரரும் உங்கள் குமாரத்திகளும் தீர்க்கதரிசனஞ் சொல்லுவார்கள்; உங்கள் மூப்பர் சொப்பனங்களையும், உங்கள் வாலிபர் தரிசனங்களையும் காண்பார்கள்.
ஊழியக்காரர்மேலும் ஊழியக்காரிகள்மேலும், அந்நாட்களிலே என் ஆவியை ஊற்றுவேன்.
வானத்திலும் பூமியிலும் இரத்தம் அக்கினி புகைஸ்தம்பங்களாகிய அதிசயங்களைக் காட்டுவேன்.
கர்த்தருடைய பெரிதும் பயங்கரமுமான நாள் வருமுன்னே சூரியன் இருளாகவும், சந்திரன் இரத்தமாகவும் மாறும்.
அப்பொழுது கர்த்தருடைய நாமத்தைத் தொழுதுகொள்ளுகிறவனெவனோ அவன் இரட்சிக்கப்படுவான்; கர்த்தர் சொன்னபடி, சீயோன் பர்வதத்திலும் எருசலேமிலும், கர்த்தர் வரவழைக்கும் மீதியாயிருப்பவர்களிடத்திலும் இரட்சிப்பு உண்டாயிருக்கும்.