இஸ்ரவேல் பலனற்ற திராட்சச்செடி, அது தனக்குத்தானே கனிகொடுக்கிறது; அவன் தன் கனியின் திரளுக்குச் சரியாய்ப் பலிபீடங்களைத் திரளாக்குகிறான்; தங்கள் தேசத்தின் செழிப்புக்குச் சரியாய்ச் சிறப்பான சிலைகளைச் செய்கிறார்கள்.
அவர்கள் இருதயம் பிரிக்கப்பட்டிருக்கிறது; இப்போதும் குற்றஞ்சுமத்தப்படுவார்கள்; அவர்கள் பலிபீடங்களை இடித்து, அவர்கள் சிலைகளை நாசமாக்குவார்.
நாம் கர்த்தருக்குப் பயப்படாமற்போனபடியினால் நமக்கு ராஜா இல்லை; ராஜா இருந்தாலும் நமக்காக என்ன செய்வான் என்று இனிச் சொல்லுவார்கள்.
பொய்யாணையிடுகிற வார்த்தைகளைச் சொல்லி, உடன்படிக்கைபண்ணிக்கொண்டார்கள்; ஆகையால் வயல்வெளியின் படைச்சால்களில் விஷப்பூண்டுகளைப்போல நியாயத்தீர்ப்பு முளைக்கும்.
அதுவும் அசீரியாவிலே யாரேப் ராஜாவுக்குக் காணிக்கையாகக் கொண்டுபோகப்படும்; எப்பிராயீம் இலச்சையடைவான்; இஸ்ரவேல் தன் ஆலோசனையினாலே வெட்கப்படுவான்.
சமாரியாவின் ராஜா தண்ணீரின்மேல் இருக்கிற நுரையைப்போல் அழிந்துபோவான்.
இஸ்ரவேலுடைய பாவமாகிய ஆபேனின் மேடைகள் அழிக்கப்படும்; முட்செடிகளும் முட்பூண்டுகளும் அவர்கள் பலிபீடங்களின்மேல் முளைக்கும்; பர்வதங்களைப்பார்த்து எங்களை மூடுங்கள் என்றும், குன்றுகளைப்பார்த்து எங்கள்மேல் விழுங்கள் என்றும் சொல்லுவார்கள்.
இஸ்ரவேலே, நீ கிபியாவின் நாட்கள் முதல் பாவஞ்செய்துவந்தாய்; கிபியாவிலே அக்கிமக்காரர்மேல் வந்த யுத்தம் தங்களைக் கிட்டுவதில்லையென்று அந்த நிலையிலே நிற்கிறார்கள்.
நான் அவர்களை தண்டிக்க விரும்புகிறேன்; அவர்கள் செய்த இரண்டுவித பாவங்களினிமித்தம் கட்டப்படும்போது, ஜனங்கள் அவர்களுக்கு விரோதமாய்க் கூடுவார்கள்.
எப்பிராயீம் நன்றாய்ப் பழக்கப்பட்டுப் போரடிக்க விரும்புகிற கடாரியாயிருக்கிறான்; ஆனாலும் நான் அவன் அழகான கழுத்தின்மேல் நுகத்தடியை வைப்பேன்; எப்பிராயீமை ஏர் பூட்டி ஓட்டுவேன்; யூதா உழுவான், யாக்கோபு அவனுக்குப் பரம்படிப்பான்.
நீங்கள் நீதிக்கென்று விதைவிதையுங்கள்; தயவுக்கொத்ததாய் அறுப்பு அறுங்கள்; உங்கள் தரிசுநிலத்தைப் பண்படுத்துங்கள்; கர்த்தர் வந்து உங்கள்மேல் நீதியை வருஷிக்கப்பண்ணுமட்டும், அவரைத் தேடக் காலமாயிருக்கிறது.
அநியாயத்தை உழுதீர்கள், தீவினையை அறுத்தீர்கள்; பொய்யின் கனிகளைப் புசித்தீர்கள்; உங்கள் வழியையும் உங்கள் பராக்கிரமசாலிகளின் திரளையும் நம்பினீர்கள்.
ஆகையால் உங்கள் ஜனங்களுக்குள் அமளி எழும்பும்; பிள்ளைகளின்மேல் தாய் மோதியடிக்கப்பட்ட யுத்தநாளிலே பெத்தார்பேலைச் சல்மான் அழித்ததுபோல, உங்கள் எல்லா அரண்களும் அழிக்கப்படும்.
உங்கள் கொடிய பொல்லாப்பினால் பெத்தேல் இப்படிப்பட்டதை உங்களுக்குச் செய்யும்; அதிகாலமே இஸ்ரவேலின் ராஜா முற்றிலும் சங்கரிக்கப்படுவான்.