Through faith also Sara herself received strength to conceive seed, and was delivered of a child when she was past age, because she judged him faithful who had promised.
ஆறாம் வருஷத்து ஆறாம் மாதம் ஐந்தாந்தேதியிலே, நான் என் வீட்டில் உட்கார்ந்திருக்கிறபோதும், யூதாவின் மூப்பர்கள் எனக்கு முன்பாக உட்கார்ந்திருக்கிறபோதும், கர்த்தராகிய ஆண்டவருடைய கரம் அங்கே என்மேல் அமர்ந்தது.
அப்பொழுது இதோ, அக்கினிச்சாயலாய்த் தோன்றுகிற ஒருவரைக் கண்டேன்; அவருடைய இடுப்புக்குக் கீழெல்லாம் அக்கினியும் அவருடைய இடுப்புக்கு மேலெல்லாம் சொகுசாவைப்போல் பிரகாசிக்கிற சாயலுமாயிருந்தது.
கைபோல் தோன்றினதை அவர் நீட்டி, என் தலைமயிரைப் பிடித்து என்னைத் தூக்கினார்; ஆவியானவர் என்னைப் பூமிக்கும் வானத்துக்கும் நடுவே கொண்டுபோய், தேவதரிசனத்திலே என்னை எருசலேமில் வடதிசைக்கு எதிரான உள்வாசலின் நடையிலே விட்டார்; அங்கே எரிச்சலுண்டாக்குகிற விக்கிரகத்தின் ஸ்தானம் இருந்தது.
இதோ, நான் பள்ளத்தாக்கிலே கண்டிருந்த தரிசனத்துக்குச் சரியாக இஸ்ரவேலின் தேவனுடைய மகிமை அங்கே விளங்கினது.
அவர் என்னைப்பார்த்து: மனுபுத்திரனே, உன் கண்களை ஏறெடுத்து, வடக்கே பார் என்றார்; அப்பொழுது நான் என் கண்களை ஏறெடுத்து, வடக்கே பார்த்தேன்; இதோ, பலிபீடத்தின் வாசலுக்கு வடக்கே பார்த்தேன்; நடையிலே எரிச்சலுண்டாக்குகிற அந்த விக்கிரகம் இருந்தது.
அவர் என்னை நோக்கி: மனுபுத்திரனே, அவர்கள் செய்கிறதைக் காண்கிறாயா? என் பரிசுத்த ஸ்தலத்தைவிட்டு என்னைத் தூரமாய்ப் போகப்பண்ணும்படியான இஸ்ரவேல் வம்சத்தார் இங்கே செய்கிற மிகுந்த அருவருப்புகளைக் காண்கிறாய் அல்லவா? இதிலும் அதிக அருவருப்புகளை இன்னமும் காண்பாய் என்று சொல்லி,
என்னைப் பிராகாரத்தின் வாசலுக்குக் கொண்டுபோனார்; அப்பொழுது இதோ, சுவரில் ஒரு துவாரத்தைக் கண்டேன்.
அவர் என்னை நோக்கி: மனுபுத்திரனே, நீ சுவரிலே துவாரமிடு என்றார்; நான் சுவரிலே துவாரமிட்டபோது, இதோ, ஒரு வாசல் இருந்தது.
அவர் என்னைப்பார்த்து: நீ உள்ளேபோய், அவர்கள் இங்கே செய்கிற கொடிய அருவருப்புகளைப் பார் என்றார்.
நான் உள்ளே போய்ப் பார்த்தபோது, இதோ, சகலவித ஊரும் பிராணிகளும் அருவருப்பான மிருகங்களுமாகிய இவைகளின் சுரூபங்களும், இஸ்ரவேல் வம்சத்தாருடைய நரகலான சகல விக்கிரகங்களும் சுவரில் சுற்றிலும் சித்திரந்தீரப்பட்டிருந்தன.
இஸ்ரவேல் வம்சத்தாரின் மூப்பரில் எழுபதுபேரும், அவர்களின் நடுவிலே சாப்பானுடைய குமாரனாகிய யசனியாவும், அவனவன் தன்தன் கையிலே தன்தன் தூபகலசத்தைப் பிடித்துக்கொண்டு, அவைகளுக்கு முன்பாக நின்றார்கள்; தூபவர்க்கத்தினால் மிகுந்த புகை எழும்பிற்று.
அப்பொழுது அவர் என்னை நோக்கி: மனுபுத்திரனே, இஸ்ரவேல் வம்சத்தாரின் மூப்பர்கள் அந்தகாரத்திலே அவரவர் தங்கள் விக்கிரகங்களின் சித்திர விநோத அறைகளில் செய்கிறதை நீ கண்டாயா? கர்த்தர் எங்களைப் பார்க்கிறதில்லை; கர்த்தர் தேசத்தைக் கைவிட்டார் என்று சொல்லுகிறார்களே என்றார்.
பின்னும் அவர்கள் செய்கிற அதிக அருவருப்புகளை இன்னமும் காண்பாய் என்று அவர் என்னுடனே சொல்லி,
என்னைக் கர்த்தருடைய ஆலயத்து வடக்கு வாசலின் நடையிலே கொண்டுபோனார்; இதோ, அங்கே தம்மூசுக்காக அழுதுகொண்டிருக்கிற ஸ்திரீகள் உட்கார்ந்திருந்தார்கள்.
அப்பொழுது அவர்: மனுபுத்திரனே, இதைக் கண்டாயா? இதிலும் அதிக அருவருப்புகளை இன்னமும் காண்பாய் என்று என்னுடனே சொல்லி,
என்னைக் கர்த்தருடைய ஆலயத்தின் உட்பிராகாரத்திலே கொண்டுபோனார்; இதோ, கர்த்தருடைய ஆலயத்தின் வாசல் நடையிலே மண்டபத்துக்கும் பலிபீடத்துக்கும் நடுவே, ஏறக்குறைய இருபத்தைந்து புருஷர், தங்கள் முதுகைக் கர்த்தருடைய ஆலயத்துக்கும் தங்கள் முகத்தைக் கீழ்த்திசைக்கும் நேராகத் திருப்பினவர்களாய்க் கிழக்கே இருக்கும் சூரியனை நமஸ்கரித்தார்கள்.
அப்பொழுது அவர் என்னை நோக்கி: மனுபுத்திரனே, இதைக் கண்டாயா? இங்கே யூதா வம்சத்தார் செய்கிற அருவருப்புகள் அற்பமான காரியமா? அவர்கள் தேசத்தைக் கொடுமையினால் நிரப்பி என்னை அடிக்கடி கோபமூட்டுகிறார்கள்; இதோ, அவர்கள் திராட்சக்கிளையைத் தங்கள் நாசிக்கு நேராகப் பிடிக்கிறார்கள்.
ஆகையால் நானும் உக்கிரத்தோடே காரியத்தை நடத்துவேன்; என் கண் தப்பவிடுவதில்லை, நான் இரங்குவதில்லை; அவர்கள் மகா சத்தமாய் என் செவிகள் கேட்கக் கூப்பிட்டாலும் அவர்களுக்கு நான் செவிகொடுப்பதில்லை என்றார்.