The eyes of your understanding being enlightened; that ye may know what is the hope of his calling, and what the riches of the glory of his inheritance in the saints,
மனுபுத்திரனே, தீர்க்கதரிசனம் சொல்லுகிற இஸ்ரவேலின் தீர்க்கதரிசிகளுக்கு விரோதமாக நீ தீர்க்கதரிசனம் உரைத்து, தங்கள் இருதயத்தில் இருக்கிறதையே எடுத்துத் தீர்க்கதரிசனஞ் சொல்லுகிறவர்களோடே நீ சொல்ல வேண்டியது என்னவென்றால்: கர்த்தருடைய வார்த்தையைக் கேளுங்கள்.
கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறதாவது: தாங்கள் ஒன்றும் தரிசியாதிருந்தும், தங்களுடைய ஆவியின் ஏவுதலைப்பின்பற்றுகிற மதிகெட்ட தீர்க்கதரிசிகளுக்கு ஐயோ!
இஸ்ரவேலே, உன் தீர்க்கதரிசிகள் வனாந்தரங்களிலுள்ள நரிகளுக்கு ஒப்பாயிருக்கிறார்கள்.
கர்த்தர் தங்களை அனுப்பாதிருந்தும், கர்த்தர் உரைத்தாரென்று சொல்லி, அவர்கள் அபத்தத்தையும் பொய்க்குறியையும் தரிசித்து, காரியத்தை நிர்வாகம்பண்ணலாமென்று நம்பிக்கையாயிருக்கிறார்கள்.
நான் உரைக்காதிருந்தும், நீங்கள் கர்த்தர் உரைத்தார் என்று சொல்லும்போது, அபத்தமான தரிசனையைத் தரிசித்து, பொய்க்குறியைச் சொல்லுகிறீர்கள் அல்லவா?
ஆகையால் கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறது என்னவென்றால்: நீங்கள் அபத்தமானதைச் சொல்லி, பொய்யானதைத் தரிசிக்கிறபடியினால், இதோ, நான் உங்களுக்கு விரோதமானவர் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்.
அபத்தமானதைத் தரிசித்து, பொய்க்குறியைச் சொல்லுகிற தீர்க்கதரிசிகளுக்கு என் கை விரோதமாயிருக்கும்; அவர்கள் என் ஜனத்தின் சங்கத்தில் இருப்பதுமில்லை; இஸ்ரவேல் வம்சத்தாரின் அட்டவணையில் எழுதப்படுவதுமில்லை; இஸ்ரவேல் தேசத்துக்குள் பிரவேசிப்பதுமில்லை; அப்பொழுது நான் கர்த்தராகிய ஆண்டவரென்று அறிந்துகொள்வீர்கள்.
சமாதானம் இல்லாதிருந்தும் சமாதானமென்று சொல்லி, அவர்கள் என் ஜனத்தை மோசம் போக்குகிறார்கள்; ஒருவன் மண்சுவரை வைக்கிறான்; இதோ, மற்றவர்கள் சாரமில்லாத சாந்தை அதற்குப் பூசுகிறார்கள்.
சாரமில்லாத சாந்தைப் பூசுகிறவர்களை நோக்கி: அது இடிந்து விழுமென்று சொல்; வெள்ளமாகப் பெருகுகிற மழை பெய்யும்; மகா கல்மழையே, நீ சொரிவாய்; கொடிய புசல்காற்றும் அதைப் பிளக்கும்.
இதோ, சுவர் விழும்போது: நீங்கள் பூசின பூச்சு எங்கே என்று சொல்வார்கள் அல்லவா?
ஆகையால் என் உக்கிரத்திலே கொடிய புசல்காற்றை எழும்பி அடிக்கப்பண்ணுவேன்; என் கோபத்திலே வெள்ளமாக அடிக்கிற மழையும், என் உக்கிரத்திலே நிர்மூலமாக்கத்தக்க பெருங்கல்மழையும், சொரியும் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்.
அப்பொழுது நீங்கள் சாரமில்லாத சாந்தைப் பூசின சுவரை நான் இடித்து, அதின் அஸ்திபாரம் திறந்து கிடக்கும்படி அதைத் தரையிலே விழப்பண்ணுவேன்; உள்ளே இருக்கிற நீங்கள் நிர்மூலமாகும்படி அது விழும்; அப்பொழுது நான் கர்த்தர் என்று அறிந்துகொள்வீர்கள்.
இப்படிச் சுவரிலும், அதற்குச் சாரமில்லாத சாந்தைப் பூசினவர்களிலும் நான் என் உக்கிரத்தைத் தீர்த்துக்கொண்டு: சுவருமில்லை, அதற்குச் சாந்துபூசினவர்களுமில்லை.
எருசலேமைக்குறித்துத் தீர்க்கதரிசனஞ்சொல்லி, சமாதானம் இல்லாதிருந்தும் சமாதானம் உண்டென்று தரிசனங்காண்கிற இஸ்ரவேலின் தீர்க்கதரிசிகள் இல்லாமற்போவார்கள் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்று கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறார்.
மனுபுத்திரனே, தங்களுடைய இருதயத்தில் இருக்கிறதையே எடுத்து, தீர்க்கதரிசனஞ்சொல்லுகிற உன் ஜனத்தின் குமாரத்திகளுக்கு எதிராக உன் முகத்தைத் திருப்பி, அவர்களுக்கு விரோதமாகத் தீர்க்கதரிசனம் உரைத்து, சொல்லவேண்டியது என்னவென்றால்:
ஆத்துமாக்களை வேட்டையாடும்படிக்குச் சகல கைகளுக்கும் தழுவணைகளைத் தைத்து, அந்தந்த வயதுள்ளவர்களுடைய தலைக்கும் தலையணைகளை உண்டுபண்ணுகிறவர்களுக்கு ஐயோ! நீங்கள் என் ஜனத்தின் ஆத்துமாக்களை வேட்டையாடி, அவைகளை உங்களுக்கு உயிரோடே காப்பாற்றுவீர்களோ?
சாகத்தகாத ஆத்துமாக்களைக் கொல்வதற்கும், உயிரோடே இருக்கத்தகாத ஆத்துமாக்களை உயிரோடே காப்பாற்றுவதற்குமாக நீங்கள் பொய்க்குச் செவிகொடுக்கிற என் ஜனத்துக்குப் பொய் சொல்லுகிறதினாலே சில சிறங்கை வாற்கோதுமைக்காகவும் அப்பத்துண்டுகளுக்காகவும் என்னை என் ஜனத்துக்குள்ளே பரிசுத்தக்குலைச்சலாக்குவீர்களோ என்று கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறார்.
ஆகையால் கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: இதோ, நீங்கள் ஆத்துமாக்களைப் பறக்கடிக்கும்படி வேட்டையாடுகிற உங்கள் தழுவணைகளுக்கு விரோதமாக நான் வந்து, அவைகளை உங்கள் புயங்களிலிருந்து பிடுங்கிக்கிழித்து, நீங்கள் பறக்கடிக்க வேட்டையாடுகிற ஆத்துமாக்களை நான் விடுதலைபண்ணி,
உங்கள் தலையணைகளைக் கிழித்து, என் ஜனத்தை உங்கள் கைகளுக்கு நீங்கலாக்கிவிடுவேன்; அவர்கள் இனி வேட்டையாடப்படும்படி உங்கள் கைகளில் இரார்கள்; அப்பொழுது நான் கர்த்தர் என்று அறிந்துகொள்வீர்கள்.
நான் சஞ்சலப்படுத்தாத நீதிமானின் இருதயத்தை நீங்கள் வீணாய் முறியப்பண்ணினபடியினாலும், துன்மார்க்கன் தன் பொல்லாத வழியைவிட்டுத் திரும்பவும் நான் அவனை உயிரோடே காக்கவுங்கூடாதபடிக்கு நீங்கள் அவனுடைய கைகளைத் திடப்படுத்தினபடியினாலும்,
நீங்கள் இனி அபத்தமானதைத் தரிசிப்பதுமில்லை, சாஸ்திரம் பார்ப்பதுமில்லை; நான் என் ஜனத்தை உங்கள் கைகளுக்கு நீங்கலாக்கிவிடுவேன்; அப்பொழுது நான் கர்த்தர் என்று அறிந்துகொள்வீர்கள் என்று சொல் என்றார்.