But they that wait upon the LORD shall renew their strength; they shall mount up with wings as eagles; they shall run, and not be weary; and they shall walk, and not faint.
அப்பொழுது எரேமியா தீர்க்கதரிசிக்குக் கர்த்தருடைய வார்த்தை உண்டாகி, அவர்:
இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் உரைக்கிறது என்னவென்றால், என்னிடத்தில் விசாரிக்கும்படி உங்களை என்னிடத்திற்கு அனுப்பின யூதாவின் ராஜாவை நீங்கள் நோக்கி: இதோ, உங்களுக்கு ஒத்தாசையாகப் புறப்பட்ட பார்வோனின் சேனை தன் தேசமாகிய எகிப்துக்குத் திரும்பிப்போகும்.
கல்தேயரோவென்றால், திரும்பி வந்து இந்த நகரத்துக்கு விரோதமாக யுத்தம்பண்ணி, அதைப் பிடித்து, அக்கினியால் சுட்டெரிப்பார்கள்.
கல்தேயர் நம்மைவிட்டு நிச்சயமாய்ப் போய்விடுவார்களென்று சொல்லி, நீங்கள் மோசம் போகாதிருங்கள், அவர்கள் போவதில்லை.
உங்களோடே யுத்தம்பண்ணுகிற கல்தேயருடைய சேனையையெல்லாம் நீங்கள் முறிய அடித்தாலும், மீந்தவர்கள் எல்லாரும் காயம்பட்டவர்களாயிருந்தாலும், அவர்கள் தங்கள் கூடாரங்களிலிருந்து எழும்பி, இந்த நகரத்தை அக்கினியால் சுட்டெரிப்பார்கள் என்று கர்த்தர் உரைக்கிறார் என்று சொல்லுங்கள் என்றார்.
எரேமியா அவ்விடத்தைவிட்டு, ஜனத்தின் நடுவே ஜாடையாய் விலகி, பென்யமீன் தேசத்துக்குப் போக மனதாய் எருசலேமிலிருந்து புறப்பட்டுப்போனான்.
அவன் பென்யமீன் வாசலில் வந்தபோது, காவற்சேர்வையின் அதிபதியாகிய யெரியா என்னும் நாமமுள்ள ஒருவன் அங்கே இருந்தான்; அவன் அனனியாவின் குமாரனாகிய செலேமியாவின் மகன்; அவன்: நீ கல்தேயரைச் சேரப்போகிறவன் என்றுசொல்லி, எரேமியா தீர்க்கதரிசியைப் பிடித்தான்.
அப்பொழுது எரேமியா: அது பொய், நான் கல்தேயரைச் சேரப்போகிறவனல்ல என்றான்; ஆனாலும் யெரியா எரேமியாவின் சொல்லைக் கேளாமல், அவனைப் பிடித்து, பிரபுக்களிடத்தில் கொண்டுபோனான்.
அப்பொழுது பிரபுக்கள்: எரேமியாவின்பேரில் கடுங்கோபங்கொண்டு, அவனை அடித்து, அவனைச் சம்பிரதியாகிய யோனத்தானுடைய வீட்டில் காவற்படுத்தினார்கள்; அவர்கள் அதைக் காவற்கூடமாக்கியிருந்தார்கள்.
அப்படியே எரேமியா காவற்கிடங்கின் நிலவறைகளில் பிரவேசித்து, அங்கே அநேகநாள் இருந்தான்.
பின்பு சிதேக்கியா ராஜா அவனை அழைத்தனுப்பி: கர்த்தரால் ஒரு வார்த்தை உண்டோ என்று ராஜா அவனைத் தன் வீட்டிலே இரகசியமாய்க் கேட்டான். அதற்கு எரேமியா: உண்டு, பாபிலோன் ராஜாவின் கையில் ஒப்புக்கொடுக்கப்படுவீர் என்று சொன்னான்.
பின்னும் எரேமியா, சிதேக்கியா ராஜாவை நோக்கி: நீங்கள் என்னைக் காவல் வீட்டிலே அடைப்பதற்கு, நான் உமக்கும் உம்முடைய ஊழியக்காரருக்கும் இந்த ஜனத்துக்கும் விரோதமாக என்ன குற்றஞ்செய்தேன்?
பாபிலோன் ராஜா உங்களுக்கும் இந்த தேசத்துக்கும் விரோதமாக வருவதில்லையென்று உங்களுக்குத் தீர்க்கதரிசனம் சொன்ன உங்களுடைய தீர்க்கதரிசிகள் எங்கே?
இப்போதும் ராஜாவாகிய என் ஆண்டவனே, எனக்குச் செவிகொடுத்து, என் விண்ணப்பத்துக்கு தயைசெய்து, என்னைச் சம்பிரதியாகிய யோனத்தானுடைய வீட்டிற்குத் திரும்ப அனுப்பவேண்டாம்; அனுப்பினால் நான் அங்கே செத்துப்போவேன் என்றான்.
அப்பொழுது எரேமியாவைக் காவற்சாலையின் முற்றத்திலே காக்கவும், நகரத்திலே அப்பமிருக்குமட்டும் அப்பஞ்சுடுகிறவர்களின் வீதியிலே தினம் ஒரு அப்பத்தை அவனுக்கு வாங்கிக்கொடுக்கவும் கட்டளையிட்டான்; அப்படியே எரேமியா காவற்சாலையின் முற்றத்திலே இருந்தான்.