But love ye your enemies, and do good, and lend, hoping for nothing again; and your reward shall be great, and ye shall be the children of the Highest: for he is kind unto the unthankful and to the evil.
கர்த்தர் சொல்லுகிறார்: நான் உங்கள் தாயை அனுப்பிவிட்டபோது, அவளுக்குக் கொடுத்த தள்ளுதற்சீட்டு எங்கே? அல்லது எனக்குக் கடன் கொடுத்த எவனுக்கு உங்களை நான் விற்றுப்போட்டேன்? இதோ, உங்கள் அக்கிரமங்களினிமித்தம் நீங்கள் விற்கப்பட்டீர்கள்; உங்கள் பாதகங்களினிமித்தம் உங்கள் தாய் அனுப்பிவிடப்பட்டாள்.
நான் வந்தபோது ஒருவனும் இல்லாமற்போனதென்ன? நான் கூப்பிட்டபோது மறுஉத்தரவு கொடுக்க ஒருவனும் இல்லாமற்போனதென்ன? மீட்கக்கூடாதபடிக்கு என் கரம் குறுகிற்றோ? விடுவிக்கிறதற்கு என்னிடத்தில் பெலனில்லாமற்போயிற்றோ? இதோ, என் கண்டிதத்தினாலே கடலை வற்றப்பண்ணி, நதிகளை வெட்டாந்தரையாக்கிப்போடுகிறேன்; அவைகளிலுள்ள மீன் தண்ணீரில்லாமல் தாகத்தால் செத்து நாறுகின்றது.
நான் வானங்களுக்குக் காரிருளை உடுத்தி, இரட்டை அவைகளின் மூடுசீலையாக்குகிறேன்.
இளைப்படைந்தவனுக்கு சமயத்திற்கேற்ற வார்த்தை சொல்ல நான் அறியும்படிக்கு, கர்த்தராகிய ஆண்டவர் எனக்குக் கல்விமானின் நாவைத் தந்தருளினார்; காலைதோறும் என்னை எழுப்புகிறார்; கற்றுக்கொள்ளுகிறவர்களைப்போல, நான் கேட்கும்படி என் செவியைக் கவனிக்கச்செய்கிறார்.
கர்த்தராகிய ஆண்டவர் என் செவியைத் திறந்தார்; நான் எதிர்க்கவுமில்லை, நான் பின்வாங்கவுமில்லை.
அடிக்கிறவர்களுக்கு என் முதுகையும், தாடைமயிரைப் பிடுங்குகிறவர்களுக்கு என் தாடைகளையும் ஒப்புக்கொடுத்தேன்; அவமானத்துக்கும் உமிழ்நீருக்கும் என் முகத்தை மறைக்கவில்லை.
கர்த்தராகிய ஆண்டவர் எனக்குத் துணைசெய்கிறார்; ஆகையால் நான் வெட்கப்படேன்; நான் வெட்கப்பட்டுப்போவதில்லையென்று அறிந்திருக்கிறேன்; ஆதலால் என் முகத்தைக் கற்பாறையைப்போலாக்கினேன்.
என்னை நீதிமானாக்குகிறவர் சமீபமாயிருக்கிறார்; என்னோடே வழக்காடுகிறவன் யார்? ஏகமாய் நிற்போமாக, யார் எனக்கு எதிராளி? அவன் என்னிடத்தில் வரட்டும்.
இதோ, கர்த்தராகிய ஆண்டவர் எனக்குத் துணைசெய்கிறார்; என்னை ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கிறவன் யார்? இதோ, அவர்கள் எல்லாரும் ஒரு வஸ்திரத்தைப்போலப் பழசாவார்கள்; பொட்டுப்பூச்சி அவர்களை அரிக்கும்.
உங்களில் எவன் கர்த்தருக்குப் பயந்து, அவருடைய தாசனின் சொல்லைக் கேட்டு, தனக்கு வெளிச்சமில்லாததினால் இருட்டிலே நடக்கிறானோ, அவன் கர்த்தருடைய நாமத்தை நம்பி, தன் தேவனைச் சார்ந்துகொள்ளக்கடவன்.
இதோ, நெருப்பைக் கொளுத்தி, அக்கினிப்பொறிகளால் சூழப்பட்டிருக்கிற நீங்கள் அனைவரும், உங்கள் அக்கினி தீபத்திலும், நீங்கள் மூட்டின அக்கினிஜூவாலையிலும் நடவுங்கள்; வேதனையில் கிடப்பீர்கள்; என் கரத்தினால் இது உங்களுக்கு உண்டாகும்.