Come now, and let us reason together, saith the LORD: though your sins be as scarlet, they shall be as white as snow; though they be red like crimson, they shall be as wool.
தீவுகளே, எனக்குச் செவிகொடுங்கள்; தூரத்திலிருக்கிற ஜனங்களே, கவனியுங்கள்; தாயின் கர்ப்பத்திலிருந்ததுமுதல் கர்த்தர் என்னை அழைத்து, நான் என் தாயின் வயிற்றில் இருக்கையில் என் நாமத்தைப் பிரஸ்தாபப்படுத்தினார்.
அவர் என் வாயைக் கூர்மையான பட்டயமாக்கி, தமது கரத்தின் நிழலினால் என்னை மறைத்து, என்னைத் துலக்கமான அம்பாக்கி, என்னைத் தமது அம்பறாத்தூணியிலே மூடிவைத்தார்.
அவர் என்னை நோக்கி: நீ என் தாசன்; இஸ்ரவேலே, நான் உன்னில் மகிமைப்படுவேன் என்றார்.
அதற்கு நான்: விருதாவாய் உழைக்கிறேன், வீணும் வியர்த்தமுமாய் என் பெலனைச் செலவழிக்கிறேன்; ஆகிலும் என் நியாயம் கர்த்தரிடத்திலும், என் பலன் என் தேவனிடத்திலும் இருக்கிறது என்று சொன்னேன்.
யாக்கோபைத் தம்மிடத்தில் திருப்பும்படி நான் தாயின் கர்ப்பத்திலிருந்ததுமுதல் கர்த்தர் தமக்குத் தாசனாக என்னை உருவாக்கினார்; இஸ்ரவேலோ சேராதேபோகிறது; ஆகிலும் கர்த்தருடைய பார்வையில் கனமடைவேன், என் தேவன் என் பெலனாயிருப்பார்.
யாக்கோபின் கோத்திரங்களை எழுப்பவும், இஸ்ரவேலில் காக்கப்பட்டவர்களைத் திருப்பவும், நீர் எனக்குத் தாசனாயிருப்பது அற்பகாரியமாயிருக்கிறது; நீர் பூமியின் கடைசிபரியந்தமும் என்னுடைய இரட்சிப்பாயிருக்கும்படி, உம்மை ஜாதிகளுக்கு ஒளியாகவும் வைப்பேன் என்கிறார்.
பின்னும் கர்த்தர்: அநுக்கிரககாலத்திலே நான் உமக்குச் செவிகொடுத்து, இரட்சணிய நாளிலே உமக்கு உதவி செய்தேன்; நீர் பூமியைச் சீர்ப்படுத்தி, பாழாய்க்கிடக்கிற இடங்களைச் சுதந்தரிக்கப்பண்ணவும்;
கட்டுண்டவர்களை நோக்கி: புறப்பட்டுப்போங்கள் என்றும்; இருளில் இருக்கிறவர்களை நோக்கி: வெளிப்படுங்கள் என்றும் சொல்லவும், நான் உம்மைக் காப்பாற்றி, உம்மை ஜனங்களுக்கு உடன்படிக்கையாக ஏற்படுத்துவேன்; அவர்கள் வழியோரங்களிலே மேய்வார்கள்; சகல மேடுகளிலும் அவர்களுக்கு மேய்ச்சல் உண்டாயிருக்கும்.
அவர்கள் பசியாயிருப்பதுமில்லை, தாகமாயிருப்பதுமில்லை; உஷ்ணமாகிலும், வெயிலாகிலும் அவர்கள்மேல் படுவதுமில்லை; அவர்களுக்கு இரங்குகிறவர் அவர்களை நடத்தி, அவர்களை நீரூற்றுகளிடத்திற்குக் கொண்டுபோய்விடுவார்.
என் மலைகளையெல்லாம் வழிகளாக்குவேன்; என் பாதைகள் உயர்த்தப்படும்.
இதோ, இவர்கள் தூரத்திலிருந்து வருவார்கள்; இதோ, அவர்கள் வடக்கிலும் மேற்கிலுமிருந்து வருவார்கள்; இவர்கள் சீனீம் தேசத்திலுமிருந்து வருவார்கள் என்கிறார்.
உன் கண்களை ஏறெடுத்துச் சுற்றிலும் பார்; அவர்களெல்லாரும் ஏகமாய்க்கூடி உன்னிடத்தில் வருகிறார்கள்; நீ அவர்களெல்லாரையும் ஆபரணமாகத் தரித்து, மணமகள் அணிந்துகொள்வதுபோல, நீ அவர்களை அணிந்துகொள்வாய் என்று, என் ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன் என்று கர்த்தர் உரைக்கிறார்.
அப்பொழுது உன் வனாந்தரங்களும், உன் பாழிடங்களும், நிர்மூலமான உன் தேசமும், இனிக் குடிகளின் திரளினாலே உனக்கு நெருக்கமாயிருக்கும்; உன்னை விழுங்கினவர்கள் தூரமாவார்கள்.
பிள்ளைகளற்றிருந்த உனக்கு உண்டாயிருக்கப்போகிற பிள்ளைகள்: இடம் எங்களுக்கு நெருக்கமாயிருக்கிறது; நாங்கள் குடியிருக்கும்படிக்கு விலகியிரு என்று, உன் காதுகள் கேட்கச்சொல்லுவார்கள்.
அப்பொழுது நீ: இவர்களை எனக்குப் பிறப்பித்தவர் யார்? நான் பிள்ளைகளற்றும், தனித்தும், சிறைப்பட்டும், நிலையற்றும் இருந்தேனே; இவர்களை எனக்கு வளர்த்தவர் யார்? இதோ, நான் ஒன்றியாய் விடப்பட்டிருந்தேனே; இவர்கள் எங்கேயிருந்தவர்கள்? என்று உன் இருதயத்தில் சொல்லுவாய்.
இதோ, ஜாதிகளுக்கு நேராக என் கரத்தை உயர்த்தி, ஜனங்களுக்கு நேராக என் கொடியை ஏற்றுவேன்; அப்பொழுது உன் குமாரரைக் கொடுங்கைகளில் ஏந்திக்கொண்டு வருவார்கள்; உன் குமாரத்திகள் தோளின்மேல் எடுத்துக்கொண்டு வரப்படுவார்கள் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்.
ராஜாக்கள் உன்னை வளர்க்கும் தந்தைகளும், அவர்களுடைய நாயகிகள் உன் கைத்தாய்களுமாயிருப்பார்கள்; தரையிலே முகங்குப்புறவிழுந்து உன்னைப் பணிந்து, உன் கால்களின் தூளை நக்குவார்கள்; நான் கர்த்தர், எனக்குக் காத்திருக்கிறவர்கள் வெட்கப்படுவதில்லை என்பதை அப்பொழுது அறிந்துகொள்வாய்.
பராக்கிரமன் கையிலிருந்து கொள்ளைப்பொருளைப் பறிக்கக்கூடுமோ? அல்லது நீதியாய்ச் சிறைப்பட்டுப்போனவர்களை விடுவிக்ககூடுமோ?
என்றாலும் இதோ, பராக்கிரமனால் சிறைப்படுத்தப்பட்டவர்களும் விடுவிக்கப்படுவார்கள்; பெலவந்தனால் கொள்ளையிடப்பட்டதும் விடுதலையாக்கப்படும்; உன்னோடு வழக்காடுகிறவர்களோடே நான் வழக்காடி, உன் பிள்ளைகளை இரட்சித்துக்கொள்ளுவேன்.
உன்னை ஒடுக்கினவர்களுடைய மாம்சத்தை அவர்களுக்கே தின்னக்கொடுப்பேன்; மதுபானத்தால் வெறிகொள்வதுபோல் தங்களுடைய இரத்தத்தினால் வெறிகொள்வார்கள்; கர்த்தரும் யாக்கோபின் வல்லவருமாகிய நான் உன் இரட்சகரும் உன் மீட்பருமாயிருக்கிறதை மாம்சமான யாவரும் அறிந்துகொள்வார்களென்று கர்த்தர் சொல்லுகிறார்.