மோவாபின் பெருமையையும், அவன் மேட்டிமையையும், அவன் அகங்காரத்தையும், அவன் உக்கிரத்தையும் குறித்துக் கேட்டோம்; அவன் மெத்தப் பெருமைக்காரன்; ஆனாலும் அவன் வீம்பு செல்லாது.
ஆகையால், மோவாபியர் ஒருவருக்காக ஒருவர் அலறுவார்கள், எல்லாரும் ஏகமாய் அலறுவார்கள்; கிராரேசேத் ஊரின் அஸ்திபாரங்கள் தகர்க்கப்பட்டதே என்று அவைகளுக்காகப் பெருமூச்சு விடுவார்கள்.
எஸ்போன் ஊர் வயல்கள் வாடிப்போயின; சிப்மா ஊர் திராட்சச்செடியின் நல்ல கொடிகளை ஜாதிகளின் அதிபதிகள் நறுக்கிப்போட்டார்கள்; அவைகள் யாசேர்மட்டும் சென்று வனாந்தரத்தில் படர்ந்திருந்தது; அவைகளின் கொடிகள் நீண்டு கடலுக்கப்பாலே எட்டியிருந்தது.
ஆகையால் யாசேருக்காக அழுததுபோல, சிப்மா ஊர் திராட்சச்செடிக்காகவும் மிகவும் அழுவேன்; எஸ்போனே, எலெயாலேயே, உனக்கு என் கண்ணீரைப் பாய்ச்சுவேன்; உன் வசந்தகாலத்துப் பழங்களுக்காகவும், உன் திராட்சப்பழ அறுப்புக்காகவும் ஆரவாரிக்கிற சந்தோஷ சத்தம் விழுந்துபோயிற்று.
ஆகையால் மோவாபினிமித்தம் என் குடல்களும், கிராரேசினிமித்தம் என் உள்ளமும் சுரமண்டலத்தைப்போல தொனிக்கிறது.
மோவாப் மேடைகளின்மேல் சலித்துப்போனான் என்று காணப்படும்போது, பிரார்த்தனை செய்யத் தன் பரிசுத்த ஸ்தானத்திலே பிரவேசிப்பான்; ஆனாலும் அநுகூலப்படமாட்டான்.
மோவாபைக்குறித்து அக்காலத்திலே கர்த்தர் சொன்ன வார்த்தை இதுவே.
ஒரு கூலிக்காரனுடைய வருஷங்களுக்கொத்த மூன்று வருஷங்களுக்குள்ளே மோவாபின் மகிமையும் அதின் மகா ஜனக்கூட்டமும் சீரழிந்துபோகும்; அதில் மீதியாயிருப்பது மிகவும் சிறிதும் அற்பமுமாயிருக்கும் என்று கர்த்தர் இப்பொழுது சொல்லுகிறார்.