Through faith also Sara herself received strength to conceive seed, and was delivered of a child when she was past age, because she judged him faithful who had promised.
அவர்கள் நடுவிலே நான் வாசம்பண்ண, எனக்கு ஒரு பரிசுத்த ஸ்தலத்தை உண்டாக்குவார்களாக.
நான் உனக்குக் காண்பிக்கும் வாசஸ்தலத்தின் மாதிரியின்படியும், அதினுடைய எல்லாத் தட்டுமுட்டுகளின் மாதிரியின்படியும் அதைச் செய்வீர்களாக.
சீத்திம் மரத்தினால் ஒரு பெட்டியைப் பண்ணக்கடவர்கள்; அதின் நீளம் இரண்டரை முழமும், அதின் அகலம் ஒன்றரை முழமும், அதின் உயரம் ஒன்றரை முழமுமாயிருப்பதாக.
அதை எங்கும் பசும்பொன் தகட்டால் மூடுவாயாக; நீ அதின் உட்புறத்தையும் வெளிப்புறத்தையும் அதினால் மூடி, அதின்மேல் சுற்றிலும் பொன்னினால் திரணையை உண்டாக்கி,
அதற்கு நாலு பொன் வளையங்களை வார்ப்பித்து, அவைகளை அதின் நாலு மூலைகளிலும் போட்டு, ஒரு பக்கத்தில் இரண்டு வளையங்களும், மறுபக்கத்தில் இரண்டு வளையங்களும் இருக்கும்படி தைத்து,
சீத்திம் மரத்தால் தண்டுகளைச் செய்து, அவைகளைப் பொன்தகட்டால் மூடி,
அந்தத் தண்டுகளால் பெட்டியைச் சுமக்கும்படி, அவைகளைப் பெட்டியின் பக்கங்களிலிருக்கும் வளையங்களிலே பாய்ச்சக்கடவாய்.
அந்தத் தண்டுகள் பெட்டியிலிருந்து கழற்றப்படாமல், அதின் வளையங்களிலே இருக்கவேண்டும்.
நான் உனக்குக் கொடுக்கும் சாட்சிப்பிரமாணத்தை அந்தப்பெட்டியிலே வைப்பாயாக.
பசும்பொன்னினாலே கிருபாசனத்தைப்பண்ணுவாயாக; அது இரண்டரை முழ நீளமும் ஒன்றரை முழ அகலமுமாய் இருக்கக்கடவது.
பொன்னினால் இரண்டு கேருபீன்களைச் செய்வாயாக; பொன்னைத் தகடாய் அடித்து, அவைகளைச் செய்து, கிருபாசனத்தின் இரண்டு ஓரங்களிலும் வைப்பாயாக.
ஒருபுறத்து ஓரத்தில் ஒரு கேருபீனையும் மறுபுறத்து ஓரத்தில் மற்றக் கேருபீனையும் பண்ணிவை; அந்தக் கேருபீன்கள் கிருபாசனத்தின் இரண்டு ஓரங்களிலும் அதனோடே ஏகவேலையாயிருக்கும்படி, அவைகளைப் பண்ணக்கடவாய்.
அந்தக் கேருபீன்கள் தங்கள் செட்டைகளை உயர விரித்து, தங்கள் செட்டைகளால் கிருபாசனத்தை மூடுகிறவைகளும் ஒன்றுக்கொன்று எதிர்முகமுள்ளவைகளுமாய் இருக்கக்கடவது; கேருபீன்களின் முகங்கள் கிருபாசனத்தை நோக்குகிறவைகளாயிருப்பதாக.
கிருபாசனத்தை பெட்டியின்மீதில் வைத்து, பெட்டிக்குள்ளே நான் உனக்குக் கொடுக்கும் சாட்சிப்பிரமாணத்தை வைப்பாயாக.
அங்கே நான் உன்னைச் சந்திப்பேன்; கிருபாசனத்தின்மீதிலும் சாட்சிப்பெட்டியின்மேல் நிற்கும் இரண்டு கேருபீன்களின் நடுவிலும் இருந்து நான் இஸ்ரவேல் புத்திரருக்காக உனக்குக் கற்பிக்கப் போகிறவைகளையெல்லாம் உன்னோடே சொல்லுவேன்.
சீத்திம் மரத்தால் ஒரு மேஜையையும் பண்ணுவாயாக; அது இரண்டு முழ நீளமும் ஒரு முழ அகலமும் ஒன்றரை முழ உயரமுமாய் இருக்கக்கடவது.
அதைப் பசும்பொன் தகட்டால் மூடி, சுற்றிலும் அதற்குப் பொன்னினால் திரணையை உண்டாக்கி,
சுற்றிலும் அதற்கு நாலு விரற்கடையான சட்டத்தையும், அதின் சட்டத்திற்குச் சுற்றிலும் பொன்னினால் திரணையையும் உண்டாக்கி,
அதற்கு நாலு பொன்வளையங்களைப் பண்ணி, அவைகளை அதின் நாலு கால்களுக்கு இருக்கும் நாலு மூலைகளிலும் தைக்கக்கடவாய்.
அந்த வளையங்கள் மேஜையைச் சுமக்கும் தண்டுகளுக்கு இடங்களாயிருக்கும்படி, சட்டத்தின் அருகே இருக்கவேண்டும்.
அந்தத் தண்டுகளைச் சீத்திம் மரத்தினால் செய்து, அவைகளைப் பொன்தகட்டால் மூடக்கடவாய்; அவைகளால் மேஜை சுமக்கப்படவேண்டும்.
மேஜையின்மேல் நித்தமும் என் சந்நிதியில் சமுகத்தப்பங்களை வைக்கக்கடவாய்.
பசும்பொன்னினால் ஒரு குத்துவிளக்கையும் உண்டாக்குவாயாக; அது பொன்னினால் அடிப்புவேலையாய்ச் செய்யப்படவேண்டும்; அதின் தண்டும் கிளைகளும் மொக்குகளும் பழங்களும் பூக்களும் பொன்னினால் செய்யப்படவேண்டும்.
ஆறு கிளைகள் அதின் பக்கங்களில் விடவேண்டும்; குத்துவிளக்கின் மூன்றுகிளைகள் அதின் ஒரு பக்கத்திலும், குத்துவிளக்கின் மூன்று கிளைகள் அதின் மறுபக்கத்திலும் விடவேண்டும்.
ஒவ்வொரு கிளையிலே வாதுமைக்கொட்டைக்கு ஒப்பான மூன்று மொக்குகளும், ஒரு பழமும், ஒரு பூவும் இருப்பதாக; குத்துவிளக்கிலிருந்து புறப்படும் ஆறு கிளைகளிலும் அப்படியே இருக்கவேண்டும்.
அதிலிருந்து புறப்படும் இரண்டு கிளைகளின்கீழ் ஒரு பழமும், வேறு இரண்டு கிளைகளின்கீழ் ஒரு பழமும், மற்ற இரண்டு கிளைகளின்கீழ் ஒரு பழமும் இருப்பதாக; விளக்குத்தண்டிலிருந்து புறப்படும் ஆறு கிளைகளுக்கும் அப்படியே இருக்கவேண்டும்.
அவைகளின் பழங்களும் அவைகளின் கிளைகளும் பொன்னினால் உண்டானவைகளாயிருப்பதாக; அவையெல்லாம் தகடாய் அடித்த பசும்பொன்னால் செய்யப்பட்ட ஒரே வேலையாயிருக்கவேண்டும்.
அதில் ஏழு அகல்களைச் செய்வாயாக; அதற்கு நேரெதிராய் எரியும்படிக்கு அவைகள் ஏற்றப்படக்கடவது.
அதின் கத்தரிகளும் சாம்பல் பாத்திரங்களும் பசும்பொன்னினால் செய்யப்படுவதாக.
அதையும், அதற்குரிய பணிமுட்டுகள் யாவையும் ஒரு தாலந்து பசும்பொன்னினால் பண்ணவேண்டும்.
மலையிலே உனக்குக் காண்பிக்கப்பட்ட மாதிரியின்படியே அவைகளைச் செய்ய எச்சரிக்கையாயிரு.