கனநித்திரை மனுஷர்மேல் இறங்கி, அவர்கள் படுக்கையின்மேல் அயர்ந்திருக்கையில்,
அவர் இராக்காலத்துத் தரிசனமான சொப்பனத்திலே மனுஷருடைய செவிக்குத் தாம் செய்யும் காரியத்தை வெளிப்படுத்தி, அதை அவர்களுக்கு வரும் தண்டனையினாலே முத்திரைபோட்டு,
மனுஷன் தன்னுடைய செய்கையைவிட்டு நீங்கவும், மனுஷருடைய பெருமை அடங்கவும் செய்கிறார்.
இவ்விதமாய் அவன் ஆத்துமாவைப் படுகுழிக்கும், அவன் ஜீவனைப் பட்டய வெட்டுக்கும் தப்புவிக்கிறார்.
அவன் தன் படுக்கையிலே வாதையினாலும், தன் சகல எலும்புகளிலும் அகோரமான நோவினாலும் தண்டிக்கப்படுகிறான்.
அவன் ஜீவன் அப்பத்தையும், அவன் ஆத்துமா ருசிகரமான போஜனத்தையும் அரோசிக்கும்.
அவன் மாம்சம் காணப்படாதபடிக்கு அழிந்து, மூடப்பட்டிருந்த அவன் எலும்புகள் வெளிப்படுகிறது.
அவன் ஆத்துமா பாதாளத்துக்கும், அவன் பிராணன் சாவுக்கும் சமீபிக்கிறது.
ஆயிரத்தில் ஒருவராகிய சாமாசிபண்ணுகிற தூதனானவர் மனுஷனுக்குத் தம்முடைய நிதானத்தை அறிவிக்கும்படிக்கு, அவனுக்கு அநுசாரியாயிருந்தாரேயாகில்,
அவர் அவனுக்கு இரங்கி, அவன் படுகுழியில் இறங்காதபடிக்கு: நீர் அவனை இரட்சியும்; மீட்கும் பொருளை நான் கண்டுபிடித்தேன் என்பார்.
அப்பொழுது அவன் மாம்சம் வாலிபத்தில் இருந்ததைப்பார்க்கிலும் ஆரோக்கியமடையும்; தன் வாலவயது நாட்களுக்குத் திரும்புவான்.
அவன் தேவனை நோக்கி விண்ணப்பம்பண்ணும்போது, அவன் அவருடைய சமுகத்தைக் கெம்பீரத்தோடே பார்க்கும்படி அவர் அவன்மேல் பிரியமாகி, அந்த மனுஷனுக்கு அவனுடைய நீதியின் பலனைக் கொடுப்பார்.
அவன் மனுஷரை நோக்கிப் பார்த்து: நான் பாவஞ்செய்து செம்மையானதைப் புரட்டினேன், அது எனக்குப் பிரயோஜனமாயிருக்கவில்லை.
என் ஆத்துமா படுகுழியில் இறங்காதபடி, அவர் அதை இரட்சிப்பார்; ஆகையால் என் பிராணன் வெளிச்சத்தைக் காணும் என்று சொல்லுவான்.
இதோ, தேவன் மனுஷனுடைய ஆத்துமாவைப் படுகுழிக்கு விலக்குகிறதற்கும், அவனை ஜீவனுள்ளோரின் வெளிச்சத்தினாலே பிரகாசிப்பிக்கிறதற்கும்,
அவர் இவைகளையெல்லாம் அவனிடத்தில் பலமுறை நடப்பிக்கிறார்.
யோபே, நீர் கவனித்து என் சொல்லைக் கேளும்; நான் பேசப்போகிறேன், நீர் மவுனமாயிரும்.
சொல்லத்தக்க நியாயங்கள் இருந்ததேயானால், எனக்கு மறுஉத்தரவு கொடும்; நீர் பேசும், உம்மை நீதிமானாகத் தீர்க்க எனக்கு ஆசையுண்டு.
ஒன்றும் இல்லாதிருந்ததேயாகில் நீர் என் சொல்லைக் கேளும், மவுனமாயிரும், நான் உமக்கு ஞானத்தை உபதேசிப்பேன் என்றான்.