Behold, what manner of love the Father hath bestowed upon us, that we should be called the sons of God: therefore the world knoweth us not, because it knew him not.
பின்பு சாலொமோன் எருசலேமிலே தன் தகப்பனாகிய தாவீதுக்குக் காண்பிக்கப்பட்ட மோரியா என்னும் மலையில் எபூசியனாகிய ஒர்னானின் களம் என்னும் தாவீது குறித்துவைத்த ஸ்தலத்திலே கர்த்தருடைய ஆலயத்தைக் கட்டத் துவக்கினான்.
அவன் தான் ராஜ்யபாரம்பண்ணின நாலாம் வருஷம் இரண்டாம் மாதம் இரண்டாம் தேதியிலே கட்டத்தொடங்கினான்.
மகா பரிசுத்தமான ஆலயத்தையும் கட்டினான்; அதின் நீளம் ஆலயத்தினுடைய அகலத்தின்படி இருபதுமுழமும், அதின் அகலம் இருபது முழமுமாயிருந்தது; அதை அறுநூறு தாலந்து பசும்பொன்னினால் இழைத்தான்.
ஆணிகளின் நிறை ஐம்பது பொன் சேக்கலானது; மேல் அறைகளையும் பொன்னினால் இழைத்தான்.
அவன் மகா பரிசுத்தமான ஆலயத்திலே இரண்டு கேருபீன்களையும் சித்திரவேலையாய் உண்டுபண்ணினான்; அவைகளைப் பொன்தகட்டால் மூடினான்.
அந்தக் கேருபீன்களுடைய செட்டைகளின் நீளம் இருபது முழமானது; ஒன்றினுடைய ஒரு செட்டை ஐந்து முழமாயிருந்து, ஆலயத்துச் சுவரைத் தொட்டது; மறுசெட்டை ஐந்து முழமாயிருந்து, மற்றக் கேருபீனின் செட்டையைத் தொட்டது.
மற்றக் கேருபீனின் ஒரு செட்டையும் ஐந்து முழமாயிருந்து, ஆலயத்துச்சுவரைத் தொட்டது; அதின் மறுசெட்டையும் ஐந்து முழமாயிருந்து, மற்றக் கேருபீனின் செட்டையைத் தொட்டது.
இப்படியே அந்தக் கேருபீன்களின் செட்டைகள் இருபதுமுழ விரிவாயிருந்தது; அவைகள் தங்கள் கால்களால் ஊன்றி நின்றது; அவைகளின் முகங்கள் ஆலயத்து உட்புறமாய் நோக்கியிருந்தது.
ஆலயத்திற்கு முன்னாக முப்பத்தைந்துமுழ உயரமான இரண்டு தூண்களையும், அவைகளுடைய முனைகளின் மேலிருக்கும் ஐந்துமுழ உயரமான கும்பங்களையும் உண்டாக்கி,
சந்நிதிக்கு முன்னிருக்கச் சங்கிலிகளையும் பண்ணி, தூண்களின் முனைகளின் மேல் பற்றவைத்து, நூறு மாதளம் பழங்களையும் பண்ணி அந்தச் சங்கிலிகளில் கோர்த்தான்.
அந்தத் தூண்களை அவன் தேவாலயத்திற்கு முன்பாக ஒன்றை வலதுபுறத்திலும் ஒன்றை இடது புறத்திலும் நாட்டி, வலதுபுறமானதற்கு யாகீன் என்றும், இடதுபுறமானதற்குப் போவாஸ் என்றும் பேரிட்டான்.