Come now, and let us reason together, saith the LORD: though your sins be as scarlet, they shall be as white as snow; though they be red like crimson, they shall be as wool.
இவைகளுக்குப் பின்பு, யெஸ்ரயேலனாகிய நாபோத்துக்கு யெஸ்ரயேலிலே சமாரியாவின் ராஜாவாகிய ஆகாபின் அரமனை அண்டையில் ஒரு திராட்சத்தோட்டம் இருந்தது.
ஆகாப் நாபோத்தோடே பேசி: உன் திராட்சத்தோட்டம் என் வீட்டிற்கு அடுத்திருக்கிறபடியால், அதைக் கீரைக்கொல்லையாக்கும்படி எனக்குக் கொடு, அதைப்பார்க்கிலும் நல்ல திராட்சத்தோட்டத்தை அதற்குப் பதிலாக உனக்குத் தருவேன்; அல்லது உனக்கு வேண்டுமானால், அதின் விலைக்கிரயமான பணத்தைத் தருவேன் என்றான்.
நாபோத் ஆகாபை நோக்கி: நான் என் பிதாக்களின் சுதந்தரத்தை உமக்குக் கொடாதபடி கர்த்தர் என்னைக் காப்பாராக என்றான்.
இப்படி என் பிதாக்களின் சுதந்தரத்தை உமக்குக் கொடேன் என்று யெஸ்ரயேலனாகிய நாபோத் தன்னோடே சொன்ன வார்த்தைக்காக ஆகாப் சலிப்பும் சினமுமாய்த் தன் வீட்டிற்கு வந்து, போஜனம் பண்ணாமல், தன் கட்டிலின் மேல் படுத்து, தன் முகத்தைத் திருப்பிக் கொண்டிருந்தான்.
அப்பொழுது அவன் மனைவியாகிய யேசபேல் அவனிடத்தில் வந்து: நீர் போஜனம் பண்ணாதபடிக்கு, உம்முடைய மனம் சலிப்பாயிருக்கிறது என்ன என்று அவனைக் கேட்டதற்கு,
அவன் அவளைப் பார்த்து: நான் யெஸ்ரயேலனாகிய நாபோத்தோடே பேசி: உன் திராட்சத்தோட்டத்தை எனக்கு விலைக்கிரயமாய்க் கொடு; அல்லது உனக்கு ராசியானால் அதற்குப் பதிலாக வேறே திராட்சத்தோட்டத்தை உனக்குத் தருவேன் என்றேன். அதற்கு அவன்: என் திராட்சத்தோட்டத்தை உமக்குக் கொடுக்கமாட்டேன் என்று சொன்னான் என்றான்.
அப்பொழுது அவன் மனைவியாகிய யேசபேல் அவனை நோக்கி: நீர் இப்போது இஸ்ரவேலின்மேல் ராஜ்யபாரம்பண்ணுகிறவர் அல்லவா? நீர் எழுந்து போஜனம்பண்ணி மனமகிழ்ச்சியாயிரும்; யெஸ்ரயேலனாகிய நாபோத்தின் திராட்சத்தோட்டத்தை நான் உமக்குக் கொடுப்பேன் என்று சொன்னாள்.
அவள் ஆகாபின் பெயரால் நிருபங்களை எழுதி, அவன் முத்திரையை அவைகளுக்குப் போட்டு, அந்த நிருபங்களை நாபோத் இருக்கும் பட்டணத்தில் அவனோடே குடியிருக்கிற மூப்பரிடத்துக்கும் பெரியோரிடத்துக்கும் அனுப்பினாள்.
அந்த நிருபங்களில் அவள் எழுதினது என்னவென்றால்: நீங்கள் உபவாசம் என்று பிரசித்தப்படுத்தி, நாபோத்தை ஜனத்தின் முன் நிறுத்தி,
தேவனையும் ராஜாவையும் தூஷித்தாய் என்று அவன்மேல் சாட்சி சொல்லுகிற பேலியாளின் மக்களாகிய இரண்டுபேரை அவனுக்கு எதிராக நிறுத்தி, அவனை வெளியே கொண்டுபோய் அவன் சாகும்படிக்கு அவனைக் கல்லெறியுங்கள் என்று எழுதினாள்.
அவன் பட்டணத்திலே குடியிருக்கிற மூப்பரும் பெரியோருமாகிய அவன் பட்டணத்து மனுஷர், யேசபேல் தங்களுக்கு அனுப்பின நிருபங்களில் எழுதிக் கட்டளையிட்டிருந்தபடியே செய்தார்கள்.
அவர்கள் உபவாசம் என்று பிரசித்தப்படுத்தி நாபோத்தை ஜனத்தின் முன்னே நிறுத்தினார்கள்.
அப்பொழுது பேலியாளின் மக்களாகிய இரண்டுபேர் வந்து, அவனுக்கு எதிராக உட்கார்ந்து: நாபோத் தேவனையும் ராஜாவையும் தூஷித்தான் என்று ஜனத்திற்கு முன்பாக அவன்மேல் சாட்சி சொன்னார்கள்; அதற்குப்பின்பு அவனைப் பட்டணத்திற்கு வெளியே கொண்டுபோய், அவன் சாகும்படிக்கு அவனைக் கல்லெறிந்து,
பிற்பாடு யேசபேலுக்கு, நாபோத் கல்லெறியுண்டு செத்தான் என்று சொல்லியனுப்பினார்கள்.
நாபோத் கல்லெறியுண்டு செத்ததை யேசபேல் கேட்டபோது, ஆகாபை நோக்கி: நீர் எழுந்திருந்து, யெஸ்ரயேலனாகிய நாபோத் உமக்கு விலைக்கிரயமாய்க் கொடுக்கமாட்டேன் என்று சொன்ன திராட்சத்தோட்டத்தைச் சொந்தமாய் எடுத்துக்கொள்ளும்; நாபோத் உயிரோடில்லை, அவன் செத்துப் போனான் என்றாள்.
நாபோத் செத்துப்போனதை ஆகாப் கேட்டபோது, அவன் யெஸ்ரயேலனாகிய நாபோத்தின் திராட்சத்தோட்டத்தைச் சொந்தமாய் எடுத்துக்கொள்ளும்படி எழுந்து போனான்.
கர்த்தருடைய வார்த்தை திஸ்பியனாகிய எலியாவுக்கு உண்டாயிற்று, அவர்:
நீ எழுந்து, சமாரியாவிலிருக்கிற இஸ்ரவேலின் ராஜாவாகிய ஆகாபைச் சந்திக்கும்படி போ; இதோ, அவன் நாபோத்தின் திராட்சத்தோட்டத்தைச் சொந்தமாய் எடுத்துக்கொள்ள அங்கே போயிருக்கிறான்.
நீ அவனைப் பார்த்து: நீ கொலை செய்ததும் எடுத்துக்கொண்டதும் இல்லையோ என்று கர்த்தர் சொல்லுகிறார்; நாய்கள் நாபோத்தின் இரத்தத்தை நக்கின ஸ்தலத்திலே உன்னுடைய இரத்தத்தையும் நாய்கள் நக்கும் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்று சொல் என்றார்.
அப்பொழுது ஆகாப் எலியாவை நோக்கி: என் பகைஞனே, என்னைக் கண்டுபிடித்தாயா என்றான். அதற்கு அவன்: கண்டுபிடித்தேன்; கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்ய நீ உன்னை விற்றுப்போட்டாய்.
நான் உன்மேல் பொல்லாப்பு வரப்பண்ணி, உன் சந்ததியை அழித்துப் போட்டு, ஆகாபுக்கு சுவரில் நீர்விடும் ஒரு நாயாகிலும் இராதபடிக்கு இஸ்ரவேலில் அடைபட்டவனையும் விடுபட்டவனையும் சங்கரித்து,
நீ எனக்குக் கோபம் உண்டாக்கி, இஸ்ரவேலைப் பாவஞ்செய்யப்பண்ணினதினிமித்தம், உன்னுடைய குடும்பத்தை நேபாத்தின் குமாரனாகிய யெரொபெயாமின் குடும்பத்துக்கும், அகியாவின் குமாரனாகிய பாஷாவின் குடும்பத்துக்கும் சமானமாக்குவேன் என்றார் என்று சொன்னான்.
யேசேபேலையும் குறித்துக் கர்த்தர்: நாய்கள் யேசபேலை யெஸ்ரவேலின் மதில் அருகே தின்னும்.
தன் மனைவியாகிய யேசபேல் தூண்டிவிட்டபடியே, கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்ய, தன்னை விற்றுப்போட்ட ஆகாபைப்போல ஒருவனுமில்லை.
கர்த்தர் இஸ்ரவேல் புத்திரருக்கு முன்னின்று துரத்திவிட்ட எமோரியர் செய்தபடியெல்லாம், அவன் நரகலான விக்கிரகங்களைப் பின்பற்றி, மகா அருவருப்பாய் நடந்துகொண்டான்.
ஆகாப் இந்த வார்த்தைகளைக் கேட்டபோது, தன் வஸ்திரங்களைக் கிழித்து, தன் சரீரத்தின்மேல் இரட்டைப்போர்த்துக்கொண்டு, உபவாசம்பண்ணி, இரட்டிலே படுத்துத் தாழ்மையாய் நடந்துகொண்டான்.
அப்பொழுது கர்த்தருடைய வார்த்தை திஸ்பியனாகிய எலியாவுக்கு உண்டாயிற்று, அவர்:
ஆகாப் எனக்கு முன்பாகத் தன்னைத் தாழ்த்தினதைக் கண்டாயா? அவன் எனக்கு முன்பாகத் தன்னைத் தாழ்த்துகிறபடியினால், நான் அவன் நாட்களில் அந்தப் பொல்லாப்பை வரப்பண்ணாமல், அவன் குமாரன் நாட்களில் அதை அவன் வீட்டின்மேல் வரப்பண்ணுவேன் என்றார்.