That if thou shalt confess with thy mouth the Lord Jesus, and shalt believe in thine heart that God hath raised him from the dead, thou shalt be saved.
தேவன் நோவாவையும், அவனுடனே பேழையிலிருந்த சகல காட்டு மிருகங்களையும், சகல நாட்டு மிருகங்களையும் நினைத்தருளினார்; தேவன் பூமியின்மேல் காற்றை வீசப்பண்ணினார், அப்பொழுது ஜலம் அமர்ந்தது.
ஏழாம் மாதம் பதினேழாம் தேதியிலே பேழை அரராத் என்னும் மலைகளின்மேல் தங்கிற்று.
பத்தாம் மாதம் மட்டும் ஜலம் வடிந்துகொண்டே வந்தது; பத்தாம் மாதம் முதல் தேதியிலே மலைச்சிகரங்கள் காணப்பட்டன.
நாற்பது நாள் சென்றபின், நோவா தான் பேழையில் செய்திருந்த ஜன்னலைத் திறந்து,
ஒரு காகத்தை வெளியே விட்டான்; அது புறப்பட்டுப் பூமியின்மேல் இருந்த ஜலம் வற்றிப்போகும்வரைக்கும் போகிறதும் வருகிறதுமாய் இருந்தது.
பின்பு பூமியின்மேல் ஜலம் குறைந்து போயிற்றோ என்று அறியும்படி, ஒரு புறாவைத் தன்னிடத்திலிருந்து வெளியே விட்டான்.
பூமியின்மீதெங்கும் ஜலம் இருந்தபடியால், அந்தப் புறா தன் உள்ளங்கால் வைத்து இளைப்பாற இடம் காணாமல், திரும்பிப் பேழையிலே அவனிடத்தில் வந்தது; அவன் தன் கையை நீட்டி அதைப்பிடித்துத் தன்னிடமாகப் பேழைக்குள் சேர்த்துக்கொண்டான்.
பின்னும் ஏழு நாள் பொறுத்து, மறுபடியும் புறாவைப் பேழையிலிருந்து வெளியே விட்டான்.
அந்தப் புறா சாயங்காலத்தில் அவனிடத்தில் வந்து சேர்ந்தது; இதோ, அது கொத்திக்கொண்டுவந்த ஒரு ஒலிவமரத்தின் இலை அதின் வாயில் இருந்தது; அதினாலே நோவா பூமியின்மேல் ஜலம் குறைந்துபோயிற்று என்று அறிந்தான்.
பின்னும் ஏழு நாள் பொறுத்து, அவன் புறாவை வெளியே விட்டான்; அது அவனிடத்திற்குத் திரும்பி வரவில்லை.
அவனுக்கு அறுநூற்றொரு வயதாகும் வருஷத்தில், முதல் மாதம் முதல் தேதியிலே பூமியின்மேல் இருந்த ஜலம் வற்றிப்போயிற்று; நோவா பேழையின் மேல்தட்டை எடுத்துப்பார்த்தான்; பூமியின்மேல் ஜலம் இல்லாதிருந்தது.
இரண்டாம் மாதம் இருபத்தேழாம் தேதியிலே பூமி காய்ந்திருந்தது.
அப்பொழுது தேவன் நோவாவை நோக்கி:
நீயும், உன்னோடேகூட உன் மனைவியும், உன் குமாரரும், உன் குமாரரின் மனைவிகளும் பேழையை விட்டுப் புறப்படுங்கள்.
உன்னிடத்தில் இருக்கிற சகலவித மாம்சஜந்துக்களாகிய பறவைகளையும், மிருகங்களையும், பூமியின்மேல் ஊருகிற சகல பிராணிகளையும் உன்னோடே வெளியே வரவிடு; அவைகள் பூமியிலே திரளாய் வர்த்தித்து, பூமியின்மேல் பலுகிப் பெருகக்கடவது என்றார்.
அப்பொழுது நோவாவும், அவன் குமாரரும், அவன் மனைவியும், அவன் குமாரரின் மனைவிகளும் புறப்பட்டு வந்தார்கள்.
பூமியின்மேல் நடமாடுகிற சகல மிருகங்களும், ஊருகிற சகல பிராணிகளும், சகல பறவைகளும் ஜாதிஜாதியாய்ப் பேழையிலிருந்து புறப்பட்டு வந்தன.
அப்பொழுது நோவா கர்த்தருக்கு ஒரு பலிபீடம் கட்டி, சுத்தமான சகல மிருகங்களிலும், சுத்தமான சகல பறவைகளிலும் சிலவற்றைத் தெரிந்துகொண்டு, அவைகளைப் பலிபீடத்தின்மேல் தகனபலிகளாகப் பலியிட்டான்.
சுகந்த வாசனையைக் கர்த்தர் முகர்ந்தார். அப்பொழுது கர்த்தர்: இனி நான் மனுஷன் நிமித்தம் பூமியைச் சபிப்பதில்லை; மனுஷனுடைய இருதயத்தின் நினைவுகள் அவன் சிறுவயது தொடங்கி பொல்லாததாயிருக்கிறது; நான் இப்பொழுது செய்ததுபோல, இனி சகல ஜீவன்களையும் சங்கரிப்பதில்லை.