Through faith also Sara herself received strength to conceive seed, and was delivered of a child when she was past age, because she judged him faithful who had promised.
நீங்கள் என் ஆண்டவனாகிய ஏசாவினிடத்தில் போய், நான் இதுவரைக்கும் லாபானிடத்தில் தங்கியிருந்தேன் என்றும்,
எனக்கு எருதுகளும், கழுதைகளும், ஆடுகளும், வேலைக்காரரும், வேலைக்காரிகளும் உண்டென்றும், உம்முடைய கண்களில் எனக்குத் தயவு கிடைக்கத்தக்கதாக ஆண்டவனாகிய உமக்கு இதை அறிவிக்கும்படி ஆட்களை அனுப்பினேன் என்றும் உம்முடைய தாசனாகிய யாக்கோபு சொல்லச்சொன்னான் என்று சொல்லும்படி கட்டளைகொடுத்துத் தனக்கு முன்னாக அவர்களை அனுப்பினான்.
அந்த ஆட்கள் யாக்கோபினிடத்துக்குத் திரும்பிவந்து: நாங்கள் உம்முடைய சகோதரனாகிய ஏசாவினிடத்துக்குப் போய்வந்தோம்; அவரும் நானூறு பேரோடே உம்மை எதிர்கொள்ள வருகிறார் என்றார்கள்.
அப்பொழுது யாக்கோபு மிகவும் பயந்து, வியாகுலப்பட்டு, தன்னிடத்திலிருந்த ஜனங்களையும் ஆடுமாடுகளையும் ஒட்டகங்களையும் இரண்டு பகுதியாகப்பிரித்து:
ஏசா ஒரு பகுதியின்மேல் விழுந்து அதை முறிய அடித்தாலும், மற்றப் பகுதி தப்பித்துக்கொள்ள இடம் உண்டு என்றான்.
பின்பு யாக்கோபு: என் தகப்பனாகிய ஆபிரகாமின் தேவனும், என் தகப்பனாகிய ஈசாக்கின் தேவனுமாய் இருக்கிறவரே: உன் தேசத்துக்கும் உன் இனத்தாரிடத்துக்கும் திரும்பிப்போ, உனக்கு நன்மை செய்வேன் என்று என்னுடனே சொல்லியிருக்கிற கர்த்தாவே,
அடியேனுக்கு தேவரீர் காண்பித்த எல்லா தயவுக்கும் எல்லா சத்தியத்துக்கும் நான் எவ்வளவேனும் பாத்திரன் அல்ல, நான் கோலும் கையுமாய் இந்த யோர்தானைக் கடந்துபோனேன்; இப்பொழுது இவ்விரண்டு பரிவாரங்களையும் உடையவனானேன்.
என் சகோதரனாகிய ஏசாவின் கைக்கு என்னைத் தப்புவியும், அவன் வந்து என்னையும் பிள்ளைகளையும் தாய்மார்களையும் முறிய அடிப்பான் என்று அவனுக்கு நான் பயந்திருக்கிறேன்.
தேவரீரோ: நான் உனக்கு மெய்யாகவே நன்மைசெய்து, உன் சந்ததியை எண்ணிமுடியாத கடற்கரை மணலைப்போல மிகவும் பெருகப்பண்ணுவேன் என்று சொன்னீரே என்றான்.
அன்று இராத்திரி அவன் அங்கே தங்கி, தன் கைக்கு உதவினவைகளிலே தன் சகோதரனாகிய ஏசாவுக்கு வெகுமானமாக,
இருநூறு வெள்ளாடுகளையும், இருபது வெள்ளாட்டுக் கடாக்களையும், இருநூறு செம்மறியாடுகளையும், இருபது ஆட்டுக்கடாக்களையும்,
பால் கொடுக்கிற முப்பது ஒட்டகங்களையும், அவைகளின் குட்டிகளையும், நாற்பது கடாரிகளையும், பத்துக் காளைகளையும் இருபது கோளிகைக் கழுதைகளையும், பத்துக் கழுதைக்குட்டிகளையும் பிரித்தெடுத்து,
வேலைக்காரர் கையில் ஒவ்வொரு மந்தையை தனித்தனியாக ஒப்புவித்து, நீங்கள் மந்தை மந்தைக்கு முன்னும் பின்னுமாக இடம் விட்டு எனக்கு முன்னாக ஓட்டிக்கொண்டுபோங்கள் என்று தன் வேலைக்காரருக்குச் சொல்லி,
முன்னே போகிறவனை நோக்கி: என் சகோதரனாகிய ஏசா உனக்கு எதிர்ப்பட்டு: நீ யாருடையவன்? எங்கே போகிறாய்? உனக்குமுன் போகிற மந்தை யாருடையது? என்று உன்னைக் கேட்டால்,
நீ: இது உமது அடியானாகிய யாக்கோபுடையது; இது என் ஆண்டவனாகிய ஏசாவுக்கு அனுப்பப்படுகிற வெகுமதி; இதோ, அவனும் எங்கள் பின்னே வருகிறான் என்று சொல் என்றான்.
இரண்டாம் மூன்றாம் வேலைக்காரனையும், மந்தைகளின் பின்னாலே போகிற அனைவரையும் நோக்கி: நீங்களும் ஏசாவைக் காணும்போது, இந்தப்பிரகாரமாக அவனோடே சொல்லி,
இதோ, உமது அடியானாகிய யாக்கோபு எங்கள் பின்னாலே வருகிறான் என்றும் சொல்லுங்கள் என்று கட்டளையிட்டான்; முன்னே வெகுமதியை அனுப்பி, அவனைச் சாந்தப்படுத்திக்கொண்டு, பின்பு அவன் முகத்தைப் பார்ப்பேன், அப்பொழுது ஒருவேளை என்பேரில் தயவாயிருப்பான் என்றான்.
அந்தப்படியே வெகுமதி அவனுக்குமுன் போயிற்று; அவனோ அன்று இராத்திரி பாளயத்திலே தங்கி,
இராத்திரியில் எழுந்திருந்து, தன் இரண்டு மனைவிகளையும், தன் இரண்டு பணிவிடைக்காரிகளையும், தன்னுடைய பதினொரு குமாரரையும் கூட்டிக்கொண்டு, யாப்போக்கு என்கிற ஆற்றின் துறையைக் கடந்தான்.
அவர்களையும் சேர்த்து, ஆற்றைக்கடக்கப்பண்ணி, தனக்கு உண்டான யாவையும் அக்கரைப்படுத்தினான்.
யாக்கோபு பிந்தித் தனித்திருந்தான்; அப்பொழுது ஒரு புருஷன் பொழுது விடியுமளவும் அவனுடனே போராடி,
அவனை மேற்கொள்ளாததைக்கண்டு, அவனுடைய தொடைச்சந்தைத் தொட்டார்; அதினால் அவருடனே போராடுகையில் யாக்கோபின் தொடைச்சந்து சுளுக்கிற்று.
அவர்: நான் போகட்டும், பொழுது விடிகிறது என்றார். அதற்கு அவன்: நீர் என்னை ஆசீர்வதித்தாலொழிய உம்மைப் போகவிடேன் என்றான்.
அவர்: உன் பேர் என்ன என்று கேட்டார்; யாக்கோபு என்றான்.
அப்பொழுது அவர்: உன் பேர் இனி யாக்கோபு என்னப்படாமல் இஸ்ரவேல் என்னப்படும்; தேவனோடும் மனிதரோடும் போராடி மேற்கொண்டாயே என்றார்.
அப்பொழுது யாக்கோபு: உம்முடைய நாமத்தை எனக்கு அறிவிக்கவேண்டும் என்று கேட்டான்; அதற்கு அவர்: நீ என் நாமத்தைக் கேட்பானேன் என்று சொல்லி, அங்கே அவனை ஆசீர்வதித்தார்.
அப்பொழுது யாக்கோபு: நான் தேவனை முகமுகமாய்க் கண்டேன், உயிர் தப்பிப் பிழைத்தேன் என்று சொல்லி, அந்த ஸ்தலத்துக்கு பெனியேல் என்று பேரிட்டான்.
அவன் பெனியேலைக் கடந்துபோகையில், சூரியன் உதயமாயிற்று; அவன் தொடைச்சுளுக்கினாலே நொண்டி நொண்டி நடந்தான்.